தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் : கண்டசாலா நூற்றாண்டு விழாவில் வெங்கய்யா நாயுடு பேச்சு

சென்னை: பழம்பெரும் திரைப்பட மற்றும் கர்நாடக இசை பாடகர் கண்டசாலாவின் 100வது பிறந்தநாள் விழா நேற்று சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விழாவில் கண்டசாலாவின் பாடல்களுக்கு 170 நடனக்கலைஞர்கள் நடனமாடினர்.

டிரம்ஸ் கலைஞர் சிவமணி, பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, கலை இயக்குனர் தோட்டா தரணி, இசைக்கலைஞர்கள் சுதாராணி ரகுபதி, அவசகலா கன்னியாகுமாரி,  தாயன்பன், நந்தினி ரமணி ஆகியோருக்கு கலாபிரியதர்ஷினி கண்டசாலா புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

விழாவில் வெங்கய்யா நாயுடு பேசியதாவது:

கண்டசாலா ஒரு நூற்றாண்டு கலைஞர். பல தலைமுறைகளுடன் பயணித்தவர். அவரது காலம் இசையுலகின் பொற்காலமாக இருந்தது. நான் தினமும் கண்டசாலா மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாடல்களை கேட்டுவிட்டுத்தான் தூங்க செல்வேன், காலையில் விழிப்பேன். இந்திய மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களை பாடிய கண்டசாலாவின் நூற்றாண்டு விழாவை இன்னும் சிறப்பாகவும், பெரிதாகவும் அரசு நடத்த வேண்டும். நமது கலாச்சாரத்தில் இசை இணைந்துள்ளது.

கலாச்சாரம் ஒரு மதம் அல்ல, அது நமது உரிமை. அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக சென்னை மக்கள் இசையோடு வாழ்கிறார்கள். அதுபோல், நாம் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எந்த மாநிலத்தவராக இருந்தாலும், அவரவர் தாய்மொழியில் பேச வேண்டும். பின்பு சகோதர மொழியை மதிக்க வேண்டும். பிற மொழியையும் தேவைக்கேற்ப கற்க வேண்டும்.

இவ்வாறு அவர்  பேசினார். இவ்விழாவை மத்திய அரசின் கலாச்சாரத்துறை, கலாபிரியதர்ஷினி அமைப்பு இணைந்து நடத்தின. முன்னதாக ரவி கண்டசாலா, பார்வதி ரவி கண்டசாலா வரவேற்றனர். முடிவில் மொகிந்தர் கண்டசாலா நன்றி கூறினார்.

Related Stories: