திருமணம், காதல் உறவு தொடர்பான புகாரில் போக்சோ வழக்கில் அவசரப்பட்டு கைது செய்யக் கூடாது: போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவு:

உயர் நீதிமன்றம் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தை (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

* திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது.

* அதற்கு பதிலாக, கு.வி.மு.ச.பிரிவு 41(4) ன் படி சம்மன் அனுப்பி எதிரிகளை எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம்.

* குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

* குற்றவாளிகளின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்றால் மாவட்ட கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும்.

* முக்கிய வழக்குகளில், இறுதி அறிக்கையினை (குற்றப்பத்திரிக்கை) உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், அதுவும் குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிர ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

இவ்வறிவுரைகளை மாநகர காவல் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: