93 தொகுதிகளில் 833 வேட்பாளர்கள் போட்டி குஜராத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல்: அகமதாபாத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா வாக்களிக்கின்றனர்

அகமதாபாத்: குஜாரத்தில் 93 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 63.30% வாக்குகள் பதிவாகின. 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.  

அகமதாபாத், வதோதரா மற்றும் காந்திநகர் உள்ளடக்கிய வடக்கு, மத்திய குஜராத் உட்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 93 தொகுதிகளில் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பாக, முதல்வர் பூபேந்திர படேலின் கட்லோடியா தொகுதி, ஹர்திக் படேலின் விராம்காம் தொகுதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளும் இதில் அடங்கும்.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடிக்கும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் குஜராத்தான் சொந்த மாநிலம்.  இன்று இருவரும் வாக்களிக்கின்றனர். சபர்மதி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அகமதாபாத் நகரின் ராணிப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் பிரதமர் வாக்களிக்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா நாரன்புரா தொகுதியில் உள்ள நகராட்சி துணை மண்டல அலுவலகத்தில் வாக்களிக்கிறார்.

இதற்காக அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்றுள்ளனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும், இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டிராங் ரூம்மில் வைக்கப்படும்.  குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்படும்.  நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமாகவும், பாஜ எதிர்காலத்தை நிர்ணயிக்கும் போகும் முடிவாகவும் இது இருக்கும் என்பதால், நாடே இந்த தேர்தல் முடிவை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது.   

தாயிடம் ஆசி

தேர்தல்  வாக்களிக்க நேற்று மாலை  அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி,  காந்திநகர் ரைசான் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார். அங்கு தனது  தாயார் ஹிராபாவை சந்தித்து ஆசி பெற்றார். சுமார் 45 நிமிடங்கள் அங்கு  இருந்தார். பின்னர், காந்திநகரில் உள்ள பாஜ மாநில அலுவலகத்துக்கு சென்றார்.  அங்கு அவரை அமித் ஷா, மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் மற்றும் மூத்த  தலைவர்கள் வரவேற்றனர்.

4 மாநிலங்களிலும் இன்று இடைத்தேர்தல்

உத்தரபிரதேசத்தின் மெயின்புரி எம்பி தொகுதி, காலியாக உள்ள ராம்பூர், கட்டவுலி எம்எல்ஏ தொகுதிகள், ராஜஸ்தானின் சர்தார்ஷாஹர் எம்எல்ஏ தொகுதி, பீகாரின் குர்ஹானி எம்எல்ஏ தொகுதி, சட்டீஸ்கரின் பானுபிரதாப்பூர் எம்எல்ஏ தொகுதி ஆகியவற்றிற்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. மெயின்புரி எம்பி ெதாகுதியில், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இவரது ஆதரவாக மறைந்த முலாயம் சிங் யாதவின் அரசியல் குருவாகக் கருதப்படும் நாது சிங்கின் குடும்ப உறுப்பினர் பிரசாரம் செய்தனர். இந்த இடைத்தேர்தல் டிம்பிள் யாதவ் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories: