உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்க அறிக்கை ஜல்லிக்கட்டு எப்படி நடக்கும்?

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வரப்படுகிறது.

இதில் கடந்த வாரம் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜல்லிக்கட்டு குறித்த அனைத்து விவரங்களும் கொண்ட  அறிக்கையை தாக்கல் செய்ய  தமிழக அரசிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டு இருந்தனர்.இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான ஒரு விளக்க அறிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளார்.அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜல்லிக்கட்டு  நடைபெறும் பகுதியை காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்ட துறைகள் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். மாடுபிடி வீரர்கள், உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் காளைகளை கால்நடை மருத்துவர் பரிசோதிப்பார். குறைந்தது 18 மாதம் வயதுள்ள காளைகளே ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.

காளைகளுக்கு  மது , கண்களில் மிளகாய் பொடி தூவுதல்   சட்ட விரோத செயல்கள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து,  தகுதி உள்ள காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.  50 சதுரமீட்டர் கொண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் ஒரு சமயத்தில் ஒரே ஒரு காளை மட்டுமே அவிழ்த்து விடப்படும். ஒரே நேரத்தில் 25 வீரர்கள் மட்டுமே அரங்கின் உள் காளையை அடக்க அனுமதிக்கப்படுவர்.

காளையின் திமிலை அதனை அடக்க ஒருவர் மட்டுமே பிடிப்பர், அதிகபட்சமாக 30 வினாடிகள் மட்டுமே திமிலை பிடித்து தொங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்டோர் காளையை அடக்க முற்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர். ஜல்லிக்கட்டு காளைகள் 15 மீட்டர் நீள ஜல்லிக்கட்டு அரங்கை தாண்டினால் காளையை பிடித்து செல்ல நீண்ட பாதை உள்ளது, அந்த பகுதியில் வைத்து காளையின் உரிமையாளர் அதனை பிடித்து செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: