டிஜிபி பெயரில் அதிகாரிக்கு மெசேஜ் அனுப்பி ரூ.7.50 லட்சம் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்தவர் கைது

நெல்லை:நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 12-வது  பட்டாலியன் போலீஸ் கமாண்டண்டாக பணியாற்றுபவர் கார்த்திகேயன். இவரது  செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல்  வந்தது. அதில், தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு  பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்காக முன்பணம் செலுத்த வேண்டும்  எனவும், தமிழக போலீஸ் டி.ஜி.பி. பெயர் மற்றும் படத்துடன் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் தனியார் நிறுவனம் மூலம் பல லட்சம் ரூபாய் பரிசாக அனுப்பி  வைக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது. அந்த எண்ணுக்கு மொத்தம் ரூ.7.50 லட்சம் அனுப்பினார். தொடர்ந்து குறுந்தகவல் வரவே சந்தேகம் அடைந்த அவர், நெல்லை மாவட்ட  சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். தனிப்படையினர் வெளிமாநிலங்களுக்கும் சென்று விசாரணை  நடத்தினர். இதில், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த முரளி (32),  வினய்குமார் (38) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்தது தெரியவந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் இதேபோன்ற மோசடி தெரிய வரவே அந்த ஆவணங்களை வைத்து, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன் சோகாசர் (32), நைஜீரியா  நாட்டைச் சேர்ந்த ஸ்டான்லி (40) ஆகியோர் பெங்களூரில் இருந்து மோசடியில் செய்தது தெரியவந்தது. இதையடுத்து  தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றுஇருவரையும் கைது செய்து செல்போன்கள் சிம்கார்டுகள், ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: