ஜி-20 மாநாடு நடத்துவது தொடர்பாக 40 அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

புதுடெல்லி: ஜி-20 மாநாடு நடத்துவது தொடர்பாக 40 அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்கிறார். ஜி-20 அமைப்பின் தலைமை கடந்த ஆண்டு இந்தோனேசியாவிடம் இருந்தது. சமீபத்தில் இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 உச்சி மாநாடு நடந்தது.

மாநாட்டின் நிறைவில், இந்த அமைப்புக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை கடந்த 1ம் தேதி இந்தியா ஏற்றது. அடுத்தாண்டு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஜி-20 மாநாடு நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற முழக்கத்தின்படி ஜி-20 மாநாட்டை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தும் வகையில், அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. 32 துறைகளை ஒருங்கிணைத்து நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதால், எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் ஜி-20 கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் எந்தெந்த நகரங்களை தேர்வு செய்வது என்று அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

முதன் முதலில் ஐதராபாத்தில் கூட்டத்தை சிறப்பாக நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,  டெல்லி ஜனாதிபதி மாளிகையில்  இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இதையேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று காலை 10.05 மணியளவில் புறப்பட்டு, ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக மதியம் 1 மணியளவில் டெல்லி சென்றடைகிறார். அங்கு அவருக்கு திமுக எம்பிக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். ஜி-20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதன்பிறகு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தனித்தனியே சந்தித்து, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 66 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக கிடப்பில் இருப்பது உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எடுத்துக் கூறவுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் டெல்லியில் இருந்து இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

உதய்பூரில் பிரதிநிதிகள் சந்திப்பு

இந்தியா தலைமையில் அடுத்தாண்டு நடைபெறும் ஜி-20 உச்சி மாநாடு தொடர்பான திட்டங்கள் வகுப்பது குறித்த முதல் ஆலோசனை கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று மற்றும் நாளை நடக்கிறது. இதற்காக ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் உதய்பூர் நகருக்கு நேற்று வந்தனர். இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், ஆண்டு முழுவதும் இந்தியாவில் நடத்தப்படும் கூட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் பிரதிநிதிகள் குழுவினர் ராஜ்சமந்தில் உள்ள 15ம் நூற்றாண்டின் கும்பல்கர் கோட்டை மற்றும் ரணக்பூர் ஜெயின் கோயிலுக்குச் செல்கின்றனர். 

Related Stories: