ஜி20 அமைப்பிற்கு தலைமை ஏற்ற பிரதமர் மோடி உலகை ஒன்றிணைப்பார்: பிரான்ஸ் அதிபர் புகழாரம்

லண்டன்: ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றதை வரவேற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ‘எனது நண்பர் பிரதமர் மோடி, எங்களை ஒன்றிணைப்பார்’ என புகழாரம் சூட்டி உள்ளார். வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா கடந்த 1ம் தேதி ஏற்றுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து, அடுத்த ஓராண்டுக்கு ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்காவின் வலுவான கூட்டாளி என இந்தியாவை குறிப்பிட்ட அவர், நண்பர் பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளுடன் ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் அமைதியான, நிலையான உலகத்தை உருவாக்குவதற்காக எங்களை நண்பர் பிரதமர் மோடி ஒன்றிணைப்பார் என நம்புகிறேன்’ என கூறி உள்ளார்.

Related Stories: