தென் ஆப்ரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கி புலிகளை இந்தியா கொண்டு வர ஏற்பாடு: ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம்

புதுடெல்லி: தென் ஆப்ரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிப் புலிகளை இந்தியா கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆனால் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் நிலவி வருகிறது. இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன உயிரினமான சிவிங்கி புலிகளை மீண்டும் கொண்டு வர கடந்த 2009ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நமீபியாவிடம் இருந்து பெறப்பட்ட 8 சிவிங்கி புலிகளை பிரதமர் மோடி தனது பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 17ம் தேதி மத்தியபிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார். அங்கு 50 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட 8 சிவிங்கி புலிகளும் தற்போது வனப்பகுதியில் சுதந்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, மேலும் 12 சிவிங்கி புலிகளை தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 7 ஆண் மற்றும் 5 சிவிங்கி புலிகள் கடந்த ஜூலை 15ம் தேதி முதல் குவாசுலு-நடால் மாகாணத்தில் உள்ள பிண்டா தனிமை முகாமிலும், லிம்போபோ மாகாணத்தில் உள்ள ரூய்பெர்க் தனிமை முகாமில் அடைக்கப்பட்டுள்ளன. இவற்றை இந்தியா கொண்டு வருவதற்கான தென் ஆப்ரிக்க அரசுடனான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. தென் ஆப்ரிக்க அதிபரின் கையெழுத்திற்காக ஒப்பந்தம் காத்திருக்கிறது.

இதன் காரணமாக கடந்த 4 மாதமாக 12 சிவிங்கி புலிகளும் வேட்டையாடமல் வெறுமனே இருப்பதால் அதன் உடல் எடை அதிகரித்து, உடல் தகுதியை இழந்து வருவதாக வனவிலங்கு நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த மாதத்திற்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகி விரைவில் 12 சிவிங்கி புலிகளும் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்படும் என ஒன்றிய அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: