ஏழை மாநிலங்கள் பயன்பெறும்படி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் தேவை: பிரதமர் உத்தரவு

புதுடெல்ல: ‘ஏழை மாநிலங்கள் பயன்பெறும்படி மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்’ என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டம் அமல்படுத்தப்பட்டு 16 ஆண்டுகள் ஆவதைத் தொடர்ந்து, இத்திட்டம் குறித்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கூட்டத்தில் பங்கேற்ற சில அதிகாரிகள் கூறுகையில், ‘‘இத்திட்டம் வறுமை ஒழிப்பை நோக்கமாக கொண்டதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இத்திட்டத்தின் மூலம் பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற ஏழை மாநிலங்களே அதிக பலன் அடைய வேண்டும் என வலியுறுத்தினார். தற்போதைய நிலையில், வேலை உறுதி திட்டத்தில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, ஏழை மாநிலங்களுக்கு அதிக நிதி கிடைப்பதற்கு பதிலாக, வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் இத்திட்டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக கூறினார்.

எனவே இத்திட்டத்தின் மூலம் ஏழை மாநிலங்கள் அதிக நிதி பெற்று, அதிக பலன் அடையும் வகையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்’’ என்றனர்.

தமிழகத்திற்கு பாதிப்பு?

ஏற்கனவே, இந்த திட்டத்தை மறுஆய்வு செய்ய முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இக்குழு 3 மாதத்தில் தனது பரிந்துரைகளை அறிக்கையாக வழங்க உள்ளது. பிரதமர் மோடியின் உத்தரவுப்படி, வேலை உறுதி திட்டத்தில் மறுசீரமைப்பு செய்யப்படும் பட்சத்தில், இத்திட்டத்தால் அதிக பயன் பெறும் தமிழ்நாடு, உள்ளிட்ட மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Related Stories: