தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக உள்ளது; அன்புமணி ராமதாஸ் பாராட்டு

ஆத்தூர்: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், நேற்று மாலை நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம், பேட்டியின் ேபாது அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் நன்றாக உள்ளது. பிரதமரின் பாதுகாப்பு, மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு படையினரால் கொடுக்கப்படுவது. அவர்களின் கட்டளைகளுக்கு உதவுவது தான் மாநில அரசு. பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி நடந்தது என, அண்ணாமலை ஏன் அப்படி பேசுகிறார் என தெரியவில்லை. கடந்த 15 மாதங்களாக, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

இக்கால கட்டத்தில் 33 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஒருபுறம் தற்கொலை உயிரிழப்பு என்றால், மற்றொரு புறம் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு, தினசரி ரூ.300 கோடி வருமானம். இதனால் சந்தேகம் எழுகிறது. கவர்னர் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை உடனடியாக கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும். சேலம் மாவட்டத்தை 3 ஆக பிரிக்க வேண்டும். காவிரி உபரிநீரை சரபங்கா, மணிமுத்தாறு வழியாக வசிஷ்ட நதிக்கு கொண்டு வந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். காலநிலை மாற்றத்தினால், இன்னும் 10 ஆண்டுகளில் கடும் வறட்சி, கொடியநோய் உள்ளிட்ட ஆபத்துகள் வரவுள்ளது. எனவே, இதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே செய்ய வேண்டும். 5 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நீர்மேலாண்மை உள்ளிட்ட பணிகளை, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பிரதமர் மோடி தலைமையில், ஜி20 மாநாடு 5ம்தேதி நடைபெறவுள்ளது. இதில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள், அதனை தடுக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நான் வலியுறுத்தி பேசுவேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளை, மத்திய அரசின் குழுவினர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரமும், பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், காப்பீடு திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும் இழப்பீடாக வழங்க வேண்டும். நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவை இல்லாத ஒன்றாகும்.

எங்களின் கோரிக்கைகள் அனைத்தும், தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியதாக தான் இருக்கும். தனிநபர் விமர்சனத்திற்கு என்னிடம் இடமில்லை. போதை பொருட்களின் விற்பனையை தடுக்க, கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். ஆத்தூரில் கல்லூரி அருகிலேயே உள்ள மதுபானக்கடையை விரைவில் அகற்றவில்லை எனில், நானே வந்து போராடுவேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ.,க்கள் மணி, சதாசிவம், அருள், முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், முன்னாள் எம்.பி., தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட நிர்வாகி, ஆத்தூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தலைமையில், 100க்கும் மேற்பட்டவர்கள் பாமகவில் இணைந்தனர்.

Related Stories: