தஞ்சாவூர் மாவட்டத்தில் எலி தொல்லையால் சம்பா, தாளடி பயிர்கள் சேதம் ஏக்கருக்கு 60 எலிகள் சிக்குகிறது விவசாயிகள் வேதனை

வல்லம்: தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, கள்ளப்பெரம்பூர் உட்பட பல பகுதிகளில் சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்துள்ள வயல்களில் அதிகளவில் எலித் தொல்லை உள்ளது. ஏக்கருக்கு 60 எலிகள் சிக்குகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நடப்பாண்டு மாவட்ட அளவில் சம்பா, தாளடியில் 3 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் இலக்காக வைக்கப்பட்டுள்ளது. சாகுபடி பணிகளும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, கல்விராயன் பேட்டை பகுதி வயல்களில் எலித் தொல்லை அதிகம் இருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். நெற் கதிர்கள் வளர்ந்து வரும் நிலையில் எலிகள் பயிர்களை துண்டித்து விடுகிறது. இதனால் பயிர்கள் பெருமளவில் பாதிக்கும் நிலை உள்ளது.

இதனால் எலித் தொல்லையை போக்கும் வகையில் வயல்களில் எலி கிட்டி வைத்து வருகின்றனர். இப்படி வைக்கப்படும் கிட்டிகளில் ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 எலிகள் வரை சிக்குகின்றன. இப்படி பிடிக்கப்படும் எலி ஒன்றுக்கு ரூ.30 என பணம் வாங்குகின்றனர். இது விவசாயிகளுக்கு பெரும் செலவை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து சித்திரக்குடியை சேர்ந்த விவசாயி மகேந்திரன் கூறுகையில், வயலில் தற்போது எலித் தொல்லை அதிகரித்து வருகிறது. பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில் எலிகள் அதனை துண்டித்து விடுகிறது. ஒரு பக்கம் பனிப்பொழிவு மற்றொரு பக்கம் எலித் தொல்லை என்று விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது. ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 எலிகள் வரை பிடிக்கப்படுகிறது. ஒரு எலிக்கு ரூ.30 வரை பணம் வாங்குகின்றனர் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தஞ்சாவூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அய்யம்பெருமாள் கூறுகையில், வயல்களில் எலித் தொல்லையை போக்க ஒன்பது பங்கு அரிசி மாவிற்கு ஒரு பங்கு சிமெண்ட்டை கலந்து வரப்பில் பேப்பர்களை வைத்து அதில் இந்த கலவையை வைக்க வேண்டும். இதை சாப்பிடும் எலிகள் சிமெண்ட் கலக்கப்பட்டு இருப்பதால் செரிமானம் ஏற்படாமல் இறந்து விடும். ரசாயன மருந்துகள் கலந்து வைப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் தற்போது வயல்களில் புழு, பூச்சிகளை சாப்பிட அதிகளவில் மயில், கொக்கு என பறவைகள் அதிகளவில் காணப்படுகிறது. ரசாயன மருந்து கலக்கப்பட்ட மருந்தை சாப்பிட்டு அவை இறந்து விடும் நிலை உருவாகலாம். எனவே இதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: