குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுக்கு முன்பே நாளை பாஜக உயர்மட்ட தலைவர்கள் கூட்டம்: 144 தொகுதிகளின் தோல்வி குறித்து அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: நாளையும், நாளை மறுநாளும் பாஜகவின் உயர்மட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. அப்போது 144 தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக, பாஜகவின் தேசிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் டெல்லியில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் அடுத்தாண்டு பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்கள், 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பாஜக உயர்மட்ட தலைவர்கள் கூறுகையில், ‘தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாநிலங்களின் அமைப்புப் பொறுப்பாளர் மற்றும் இணைப் பொறுப்பாளர்களுடன் மத்தியப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

அடுத்த ஆண்டு ஒன்பது மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அவற்றைத் தவிர மற்ற மாநிலங்களில் அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அதன்பின் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளுதல் குறித்து விவாதிக்கப்படும். மேலும் கடந்த 2019ல் நடந்த மக்களவை தேர்தலின் போது குறைந்த ஓட்டில் நாடு முழுவதும் 144 மக்களவை தொகுதிகளின் வெற்றிவாய்ப்பு பறிபோனது.

அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவது குறித்து கள நிலவரங்களை ஆய்வு செய்ய ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற தலைவர்களின் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் இந்த கூட்டத்தில் தங்களது அறிக்கையை சமர்பிப்பர். அதுகுறித்தும், தற்போது கைவசம் உள்ள தொகுதிகளை தக்கவைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்’ என்று கூறினர்.

Related Stories: