உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மூத்த முன்னோடிகள் 200 பேருக்கு பொற்கிழிகள்: அமைச்சர் வழங்கினார்

பெரம்பூர்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி தனியார் பள்ளியில் திமுக மூத்த முன்னோடிகள் 200 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

இதற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.சேகர் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் முருகன், ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு மூத்த முன்னோடிகள் 200 பேருக்கு ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் மதிப்புள்ள பொற்கிழி மற்றும் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள், வேஷ்டி, சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார்.

இதன்பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது; கழகத்தின் வளர்ச்சிக்கு மூத்த முன்னோடிகள் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிந்து கொள்ளவேண்டும். மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும்போது பொற்கிழியை  பெறுகின்ற அவர்களை விட அதை வழங்குகின்ற எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. திமுகவின் போர்வாளாக இளைஞரணி திகழ்ந்து வருகிறது.

இன்றைக்கு கழகத்தை வழிநடத்துபவர் இளைஞரணி செயலாளராக இருந்தவர். கழகத்திற்கு அடுத்த தலைவராக அடுத்த முதலமைச்சராக இளைஞரணியை சேர்ந்த ஒருவர்தான் வருவார் என்பதற்கு தமிழகம் முழுவதும் தொடர்ந்து எழுச்சியான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆடம்பரத்தை விட ஏழைகளுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும் என்று தலைவர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கும் மூத்த முன்னோடிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா, கலாநிதி வீராசாமி எம்.பி, எம்எல்ஏக்கள் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, எபினேசர் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: