எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 32 பவுன் நகை: சென்னை இளம்பெண்ணிடம் ஒப்படைப்பு

விழுப்புரம்: சென்னையில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றுமுன் தினம் இரவு விழுப்புரத்திற்கு வந்தது. அப்போது ரயிலின் முன்பதிவு பெட்டியான எஸ்-9 கோச்சில் ஒரு டிராவல்ஸ் பை கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. அந்த பையை அதே பெட்டியில் பயணம் செய்த பயணிகள் யாரும் உரிமை கொண்டாட முன்வரவில்லை. அந்த சமயத்தில் விழுப்புரத்தில் இருந்து ரயில்வே பெண் போலீஸ் சுதா என்பவர், அந்த ரயிலில் வழிக்காவல் பாதுகாப்பு பணிக்கு சென்றார். அந்த பை கேட்பாரற்ற நிலையில் இருந்ததை பார்த்த சுதா, இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டார். அதற்கு அவர், சென்னையில் இருந்து ரயில் புறப்படும்போதே இந்த பை இதே இருக்கையில் இருப்பதாகவும், யாரும் உரிமை கொண்டாடவில்லை என்றார்.

இதையடுத்து அந்த இருக்கையை முன்பதிவு செய்தவரின் விவரம் குறித்து உரிய விசாரணை நடத்தி அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண் மூலம் போலீசார், தொடர்புகொண்டு பேசினர். அப்போது அந்த பை, சென்னை மாத்தூரை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி சுசித்ராவுக்கு (30) சொந்தமானது என்பதும், அவர், அந்த பையை தனது இருக்கையில் வைத்துவிட்டு வேறு பெட்டியில் உள்ள உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றதும், அந்த பையினுள் 32 பவுன் நகை இருந்ததும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து உரிய விசாரணைக்கு பின்பு அந்த பை சுசித்ராவின் பை என்பதை போலீசார் உறுதி செய்தனர். அதன் பின்னர் அவரிடம் உரிய அறிவுரைகளை வழங்கி நகையுடன் அந்த பையை அவரிடம் ஒப்படைத்தனர். பெண் போலீஸ் சுதாவின் செயலை சக போலீசாரும் மற்றும் ரயில்வே பயணிகளும் வெகுவாக பாராட்டினர்.

Related Stories: