திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9 மாதங்களில் ரூ.1,161 கோடி காணிக்கை: வங்கியில் ரூ.15,938 கோடி, 10,258 கிலோ தங்கம் டெபாசிட்

திருமலை: திருப்பதி ஏழுமைலையான் கோயிலில் கடந்த 9 மாதங்களில் ரூ.1,161 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. இதுவரை வங்கியில் ரூ.15,938 கோடி ரொக்கம், 10,258 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் நகை, பணம் மற்றும் பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதன்படி தினசரி சுமார் ரூ.2.50 கோடி முதல் ரூ.5 கோடிக்கு மேலாக காணிக்கை கிடைக்கிறது.

இதனை தினமும் இரவுதோறும் எண்ணப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் வரை (9 மாதங்களில்) ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் காணிக்கை கிடைத்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ரூ.127.30 கோடி வருவாய் கிடைத்தது. இதன்மூலம் கடந்த 9 மாதங்களில் மொத்தம் ரூ.1,161.74 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. இதனால், இந்த நிதியாண்டில் உண்டியல் வருவாய் ரூ.1,600 கோடியை தாண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கருதுகின்றனர். கடந்த 9 மாதங்களில் அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் ரூ.139.35 கோடி கிடைத்தது. தினமும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவதாலும், நாளொன்றுக்கு ரூ.4 கோடி வருமானம் கிடைக்கிறது.

இதுவரை 2019-20ம் நிதியாண்டுக்கான அதிகபட்ச உண்டியல் வருவாய் ரூ.1,313 கோடியாகும். குறிப்பாக வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பதால் அந்த நாட்களில் காணிக்கை தொகை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு 1,000 கோடி கிடைப்பதால் தற்போது வரை தேவஸ்தானத்தின் நிலையான வைப்புத்தொகை (பிக்சட் டெபாசிட்) ரூ.15,938 கோடியாகவும், தங்கம் கையிருப்பு 10,258 கிலோவையும் தாண்டியுள்ளது. கடந்த 1950ம் ஆண்டு வரை கிடைத்த உண்டியல் வருமானம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாகவே இருந்தது. 1958ல் முதன்முறையாக ஒரு லட்சத்தை தாண்டியது. 1990ம் ஆண்டு முதல் ரூ.1 கோடிக்கும் அதிகமான வருவாய் வரத்தொடங்கியது. பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரேநாளில் 63,931 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 34,813 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியிருந்தனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில் ரூ.3.48 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் நேற்றிரவு முதல் அதிகரித்து வருகிறது. நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் பெறாமல் வந்த பக்தர்கள் சுமார் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் ெசய்து வருகின்றனர். 

Related Stories: