மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் 4 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை

நாகை: நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த சியாத்தமங்கை மேல்இருப்பு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(33).  கூலித்தொழிலாளி. இவரது மனைவி தீபா(29), இவர்களது மகள் ருத்ரா(4). மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் மாரிமுத்து அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு  சில மாதங்களுக்கு முன் தீபா, குழந்தை ருத்ராவுடன் நன்னிலத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் மாமனார் வீட்டுக்கு சென்ற மாரிமுத்து, மனைவியை சமாதானம் பேசி குழந்தையுடன் வீட்டுக்கு குடும்பம் நடத்த வருமாறு கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் மனைவியை அடித்துள்ளார். மேலும், குழந்தை ருத்ராவை மட்டும் அழைத்து கொண்டு  மாரிமுத்து திருமருகலுக்கு வந்தார்.

தந்தையுடன் இருந்த ருத்ரா கடந்த 2 நாட்களாக தாயிடம் செல்ல வேண்டும் என தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. இதனால் தீபாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மாரிமுத்து குழந்தை அழுதுகொண்டே இருப்பதால் திருமருகல் கடைத்தெருவுக்கு வருமாறும், அங்கு வந்து குழந்தையை பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து தீபா திருமருகலுக்கு வந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் மாரிமுத்துவும், குழந்தையும் வராததால் கணவரின் செல்போனுக்கு தீபா தொடர்பு கொண்டார்.

ஆனால் பதில் இல்லை. இதனால் சந்தேகமடைந்த தீபா கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கதவை திறந்து பார்த்தபோது கணவர் தூக்கில் பிணமாக தொங்கினார். படுக்கையில் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. இதைபார்த்து தீபா கதறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர்  ஓடிவந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த  போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி  குடும்பம் நடத்த வர மறுத்ததாலும்,  தாயிடம் செல்லவேண்டும் என தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்ததாலும் ஆத்திரமடைந்த மாரிமுத்து குழந்தையின் முகத்தை துணியால் மூடி அமுக்கி கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: