×

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி ஆன்மிக பெருமக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் தீபத்திருவிழா ஏற்பாடுகள்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 52 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு உதவி செய்வதற்காக, 85 இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் காவல்துறை மூலம் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

தீபத்திருவிழா பாதுகாப்பு பணியை, கடந்த இரண்டு நாட்களாக டிஜிபி நேரில் ஆய்வு நடத்தி, தேவையான அறிவுரைகளை காவல்துறையினருக்கு வழங்கியிருக்கிறார். வடக்கு மண்டல ஐஜி மற்றும் டிஐஜி, எஸ்பிக்கள் உள்பட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு வரும் ஆன்மிக பெருமக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து முதல்வர் பேசி வருகிறார். அவரது கவனம் எல்லாம் தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் மீதுதான் உள்ளது. தீபத்திருவிழா சிறப்பாக நடந்திட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின், முதல்வரின் உத்தரவாகும்.

கவர்னர் வருகை: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அமைச்சர் கூறுகையில், ‘திருவண்ணாமலை மகாதீபத்திருவிழாவில் பங்கேற்க தமிழக ஆளுநர் வருவதாக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் வந்திருக்கிறது.

எனவே, ஆளுநருக்கு உரிய கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தீபத்திருவிழாவுக்கு வரும் ஆளுநரை சிறப்பிக்க வேண்டும். அவரது ஆன்மிக பணிகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். அதே நேரத்தில், ஆளுநர் வருகை எனும் பெயரில் அவருடன் பாஜகவினர் வருவதை எல்லாம் அனுமதிக்க முடியாது. எனவே, ஆளுநருடன் எத்தனை பேர் வருகின்றனர் என்ற விவரங்களை அவரது செயலாளரிடம் தொடர்புகொண்டு முன்கூட்டியே கலெக்டர் பெற வேண்டும். அனுமதியில்லாமல் யாரையும் காவல்துறை அனுமதிக்கக் கூடாது’ என்றார்.

நாளை மறுதினம் மகா தீபம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளான நேற்று, பஞ்ச ரத உற்சவம் நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர், 2வதாக சுப்பிரமணியர் தேர், 3வதாக உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் தேர் (மகா ரதம்) நடந்தது. இதைத்தொடர்ந்து, அம்மன் தேர் பவனி வந்தது. பெண்கள் மட்டுமே அம்மன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிறைவாக, சண்டிகேஸ்வரர் தேர் மாட வீதியில் பவனி வந்தது.

இந்நிலையில் தீபவிழாவின் 8ம் நாளான இன்று காலை வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி நடந்தது. தொடர்ந்து இன்று மாலை தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் வீதியுலாவும், அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் பவனியும் நடக்கிறது. இந்நிலையில் நாளை மறுதினம் (6ம் தேதி) அதிகாலை கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

Tags : CM. K. ,Stalin ,Peninsula Festival Arrangements ,Minister ,A. Etb Velu , According to Chief Minister M.K.Stal's orders, Deepatri festival arrangements are being made for the happiness of spiritual people: Minister A.V.Velu Information
× RELATED மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை...