×

சென்னை விமான நிலைய கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வந்தது: 6 அடுக்குகள் கொண்ட நிறுத்துமிடத்தில் 2150 கார்களை நிறுத்தலாம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்ட பல அடுக்கு கார் நிறுத்தகம் நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வந்தது. முழுவதும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதால் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு விமானப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி மதிப்பில் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ஒரே நேரத்தில் 2,150 கார்கள் நிறுத்தும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 6 அடுக்குமாடிகள் கொண்ட நவீன கார் பார்க்கிங் கட்டிடம் கட்டப்பட்டது. எனினும், இந்த கார் பார்க்கிங் பல்வேறு காரணங்களினால் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

இதனால் பழைய கார் பார்க்கிங் பகுதியில் இருந்து லக்கேஜ்களுடன் விமானத்தை குறித்த நேரத்தில் பிடிப்பதற்கு பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன கார் பார்க்கிங் கட்டிடம் பயணிகளின் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த கார் பார்க்கிங் கிழக்கு, மேற்கு என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் உள்நாட்டு விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். மேற்கு பகுதியில் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

இந்த கார் பார்க்கிங்கில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய 5 பாயிண்டுகள் உள்ளன. மேலும், இங்கு மாற்று திறனாளிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கார் பார்க்கிங்குக்குள் செல்லும்  அனைத்து வாகனங்களும் தரை தளத்தில் உள்ள பிரதான வழியாகத்தான் நுழைய வேண்டும்.

வாகனங்கள் உள்ளே நுழையும்போது, வாகனம் வந்த நேரத்தை கம்ப்யூட்டரில் பதிவு செய்து டோக்கன் வழங்கப்படுகிறது. உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் இரண்டுக்குமே ஒரே டோக்கன்தான். அதன்பின் அவர்கள் கிழக்கு, மேற்கு பகுதிகளில் பிரிந்து வாகனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வாகனங்கள் உள்ளே நுழையும்போது நேரத்தை குறிப்பிட்டு கொடுக்கும் டோக்கனை, வாகன ஓட்டிகள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். டோக்கன்களை தவறவிட்டால், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.150, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

புதிய மல்டிலெவல் கார் பார்க்கிங்கில், ஏற்கெனவே பயணிகளை ஏற்றி, இறக்கி வரும் வாகனங்களுக்கு 10 நிமிட இலவச நேரம் தொடரும். இந்த புதிய கார் பார்க்கிங்கில் விமானநிலைய மற்றும் விமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 100 கார்கள், 100 இருசக்கர வாகனங்கள் மட்டுமே இலவசமாக நிறுத்த அனுமதி உண்டு.

அதற்கு மேலான வாகனங்களுக்கு சலுகை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. விமானநிலைய ஒப்பந்த பணியாளர்களுக்கு தற்போது ரூ.250 மாதாந்திர கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. புதிய கார் பார்க்கிங்கில் அவர்களுக்கு அதே கட்டணத்தை வசூலிப்பதா அல்லது புதிய கட்டணம் நிர்ணயிப்பதா என்பது குறித்து புதிய கார் பார்க்கிங் ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்வர்.

அதேபோல் பணி நிமித்தமாக வரும் பத்திரிகை, ஊடகம் மற்றும் போலீசாருக்கு இதுவரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.  அவர்களிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து ஒப்பந்ததாரர்கள் முடிவெடுப்பர்.  அதேபோல் விமானநிலையத்தில் நிரந்தரமாக இயங்கி வரும் ப்ரீபெய்டு டாக்சி கட்டணம் குறித்து புதிய ஒப்பந்ததாரர் முடிவு செய்யலாம் என கூறப்படுகிறது.

சென்னை விமானநிலையத்தில் உள்நாடு, வெளிநாடு செல்லும் பயணிகளின் சொந்த வாகனங்கள், விமானநிலைய போர்டிகோ வரை செல்வதற்கான அனுமதி தொடரும். ஆனால், வாடகை கார்களில் வருபவர்கள், போர்டிகோ வரை செல்வதற்கு, உள்ளே நுழையும்போதே ரூ.40 டோக்கன் வாங்கி வரவேண்டும். அந்த வாகனங்கள் 10 நிமிடங்களில் சென்றுவிட்டால் கூடுதல் கட்டணம் கிடையாது.

அதற்குமேல் அரைமணி நேர பார்க்கிங் கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டிவரும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய கார் பார்க்கிங் வளாகம் இன்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்ததால், பழைய கார் பார்க்கிங் பகுதி மூடப்படுகிறது. அங்கு எவ்விதமான வாகனங்களும் நிறுத்த அனுமதி இல்லை. அப்பகுதியை புல்தரைகளாக மாற்றி பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தை இந்திய விமான நிலைய ஆணையம் செயல்படுத்த உள்ளது எனக் கூறப்படுகிறது.

புதிய கார் பார்க்கிங் பகுதிக்கு, கார்கள் செல்வதற்கான சாலைகள் ஒரே சீராக அமைக்கப்படாததால் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் சர்வதேச விமானநிலையத்தில் இறங்கி வரும் பயணிகள், அவர்களின் உடைமைகளை டிராலியில் வைத்து சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் தள்ளி வந்து, புதிய பார்க்கிங் பகுதியில் கார்களில் ஏறுவதற்கு சிரமப்பட்டனர்.

ஏனெனில், இங்கு பயணிகள் ஏறுவதற்கான பிக்கப் பாயிண்ட், முதல் மற்றும் 2வது தளத்தில் இருப்பதால், தரை தளத்தில் இருந்து லிப்ட் மூலம் லக்கேஜ்களுடன் செல்வதற்கு பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். லிப்ட்டில் ஒருசில பயணிகளின் அதிகளவு லக்கேஜ்கள் ஆக்கிரமித்து கொள்வதால், அதில் அதிகளவு பயணிகள் ஏறமுடிவதில்லை.

இதனால் லிப்ட்டுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும், எந்த வழியாக செல்ல வேண்டும் என்ற முறையான அறிவிப்பு இல்லாததால், பயணிகள் திணறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Tags : Chennai Airport , Chennai Airport car parking comes into operation: 2150 cars can be parked in the 6-storey parking lot
× RELATED சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு இழுவை வாகனம் மோதி குலுங்கியது விமானம்