வேதாரண்யத்தில் கனமழை அகல்விளக்கு தயார் செய்யும் பணி பாதிப்பு; அழிவில் இருந்து காக்க அரசு கருணை காட்டுமா?

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் தொடந்து மழை பெய்து வருவதால் அகல்விளக்கு தயார் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அழிவை நோக்கி செல்லும் இந்த தொழிலை காப்பாற்ற அரசு கணை காட்ட வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டுகோவ் விடுத்துள்ளனர். வேதாரண்யம் தாலுகா செட்டிபுலம், செம்போடை, தாணிக்கோட்டகம் ஆகிய பகுதிகளில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் காலம் காலமாக மின் எந்திரங்கள் உதவியில்லாமல் திருவை வைத்து கையால் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். தற்போது, கார்த்திகை மாதத்தில் வீடுகளில் ஏற்றப்படும் அகல்விளக்கு மற்றும் பொங்கல் பானை, சட்டி, அடுப்பு, திருமண சடங்குகளுக்கு உள்ள மண்பாண்டங்கள், கும்பாபிஷேக கலயங்கள் செய்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களுக்கு மண்பாண்டம் செய்ய பயன்படும் மண் எடுப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதால் ஒரு லோடு ஆட்டோ வண்டி களிமண் ரூ.4500 விலைக்கு வாங்கி மண்பாண்டங்களை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு அவ்வப்போது மழை பெய்து வருவதால் மண்பாண்டம் தயாரிக்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கில் அகல்விளக்கு பொங்கல் பானை, சட்டி, தயார் செய்வது கடுமையாக பாதிக்கப்பட்டு குறைந்த அளவில் மட்டுமே அகல்விளக்கு, பானை, சட்டி, அடுப்பு தயார் செய்து வருகின்றனர். உற்பத்தி குறைவால் தொழிலில் லாபம் இருக்காது என தொழிலாளர்கள் தெரிவித்தனர். மேலும் சென்ற ஆண்டு பொங்கலுக்கு உற்பத்தி செய்த சட்டி, பானைகள் விற்பனை ஆகாமல் உள்ளன. இத்தொழிலில் மண்பாண்டங்கள் செய்து சுடுவதற்கு என்று சரியான சூளை வசதி கூட இல்லாமல் உள்ளனர். இப்பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் மின் மோட்டார் வைத்து சட்டி, பானைகளை செய்ய வசதி இல்லாமல் திருவைகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இதனால் அதிகளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை. மேலும் சட்டி பானைகளை ரூ.50 அல்லது 60க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் கூலிக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை. அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை வங்கி கடனோ, அரசு உதவியோ கிடைக்கவில்லை. மின் எந்திரங்கள் இல்லாமல் திருவையிலேயே வைத்து செய்வதால் பெரிய அளவில் தொழில் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு கார்த்திகை தீப அகல்விளக்குகள் உற்பத்தி குறைந்த நிலையில், விற்பனையும் விளக்கு ஒரு ரூபாய், முதல் 2 ரூபாய்க்கு தான் விலைபோகிறது.

முன்பு எல்லாம் அகல்விளக்கை ஏற்றிவந்த மக்கள் தற்போது கார்த்திகை தீபத்திற்கு மெழுகுவர்த்தி, எலக்ட்ரிக் விளக்குகள் எரிய விடுகின்றனர். இதனாலுமம் எங்கள் விற்பனை அதிகம் பாதிக்கபடுகிறது. இளைய தலைமுறையினர் பழமைக்கு மதிப்பு கொடுத்தால்தான் எங்கள் தொழில் நிலைத்து நிற்கும். மேலும் நவீனமாக எவர் சில்வர், அலுமினியம், பித்தளை பாத்திரங்கள் வந்தாலும் மண்பாண்டங்களுக்கு மவுசு குறையாமல் விற்பனை நன்றாக உள்ளது. தற்போது எவர்சில்வர் அலுமினிய பாத்திரங்கள் உபயோகத்திலிருந்து மக்கள் மெல்ல மெல்ல மண்பாண்ட சமையலுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் விற்பனை நன்றாக நடைபெறுகிறது. மேலும் இளைய சமுதாயத்தினர் இந்த தொழிலை விரும்பாமல் வேறு தொழிலை நாடி செல்வதாலும், லாபம் குறைவாக உள்ளதால் மண்பாண்ட தொழிலார்களும் கூலி தொழிலுக்கு சென்று விடுவதால், அழிவின் விளிம்பில் இத்தொழில் சென்று கொண்டிருக்கிறது.

Related Stories: