திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக வளாகத்தில் ரூ.4 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணி மும்முரம்; 7 ஆயிரத்து 250 மெ.டன் கொள்ளளவு கொண்டது

திருவாரூர்: திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக வளாகத்தில் ரூ 4 கோடி மதிப்பில் 7 ஆயிரத்து 250 மெ.டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் உணவு உற்பத்தியில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் குறிப்பாக நெல் உற்பத்தியானது 90 சதவிகித அளவில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா என மொத்தம் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணியினை வழக்கமாக விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் போது மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததன் காரணமாக 8 ஆண்டுகள் வரையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொள்ள முடியாமல் போனது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்தாண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மேட்டூர் அணையானது குறித்த காலத்தில் (ஜுன் 12) திறக்கப்பட்டது மற்றும் ஆறுகள் தூர்வாரப்பட்டது, குறுவை தொகுப்பு திட்டம், பயிர் கடன்கள் வழங்கல், விவசாயத்திற்கு தேவையான விதை மற்றும் உரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டது போன்றவற்றின் காரணமாக வழக்கத்தை விட கூடுதலான பரப்பளவில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டனர். அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமான சாகுபடி பரப்பளவு 97 ஆயிரம் ஏக்கர் என்ற நிலையில் கூடுதலாக 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு என மொத்தம் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டனர்.

அதன்பின்னர் சம்பா சாகுபடியானது 3 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்ற நிலையில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் மாவட்டம் முழுவதும் 500 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

அதன்படி, கடந்தாண்டில் குறுவை மற்றும் சம்பா பருவத்தில் 94 ஆயிரத்து 375 விவசாயிகளிடமிருந்து 7 லட்சத்து 65 ஆயிரம் மெ.டன் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்காக விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ ஆயிரத்து 566 கோடி வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில், சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றில் முதல் முறையாக முன்கூட்டியே மேட்டூர் அணையானது தமிழக முதல்வர் மூலம் கடந்த மே மாதம் 24ம் தேதியே திறக்கப்பட்டதன் காரணமாகவும், கடந்தாண்டை போன்று ஆறுகள் தூர்வாரப்பட்டதால் கடைமடை வரையில் நீர் சென்றதன் காரணமாகவும் திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமான சாகுபடி பரப்பளவை விட கூடுதலாக 57 ஆயிரம் ஏக்கர் என ஒரு லட்சத்து 54 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.13 கோடியே 57 லட்சம் மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் மற்றும் கூட்டுறவு கடன்கள் வழங்கியது உட்பட பல்வேறு அரசின் உதவிகள் காரணமாக விவசாயிகள் சாகுபடியினை மும்முரமாக மேற்கொண்ட நிலையில் பின்னர் அறுடை பணிகள் நடைபெற்று மாவட்டத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மெ.டன் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருவதின் ஒரு பகுதியாக முதல்வர் மற்றும் அமைச்சர் சக்கரபாணி மூலம் உணவு துறையில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதற்காக அரசு மற்றும் தனியார் நவீன அரிசி ஆலைகளில் கலர் சார்ட்டர் கருவி பொருத்தப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக தரமான வென்மை நிற அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி அரசு நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்து செல்லாமல் நேரடியாக அரிசி ஆலைகளுக்கு எடுத்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மேலும் மாநிலத்தில் திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகள் சேதமடைவதை கருதி இந்த திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளே இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்திற்கேற்ப தமிழகத்தில் 238 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 மெ.டன் கொள்ளளவு கொண்ட செமி நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு முதல்வரால் உத்தரவிடப்பட்டு அதற்குண்டான பணிகள் நடைபெற்றுவருகிறது.

இப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவு பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் 2 ஆயிரத்து 750 மெ.டன் கொள்ளளவில் கான்கீரிட் தளத்துடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு ஒன்றும், தலா ஆயிரத்து 500 மெ.டன் கொள்ளளவில் கான்கீரிட் தளத்துடன் கூடிய 3 நெல் சேமிப்பு கிடங்கும் என மொத்தம் 4 கிடங்குகள் 7 ஆயிரத்து 250 மெ.டன் கொள்ளளவில் ரூ.4 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

Related Stories: