தேனி மாவட்டத்தில் இயற்கை வளத்தை மீட்டெடுக்க புத்துயிர் பெறும் குறுங்காடுகள் திட்டம்; தமிழக அரசு தரும் ஊக்குவிப்பு அதிகம்

தேவாரம்: தேனி மாவட்டத்தில் இழந்த இயற்கை வளத்தை மீட்க, அழிக்கப்பட்ட காடுகளின் பரப்பை மீண்டும் மீட்டெடுக்க, பறவை இனங்களை பாதுகாக்கும் முயற்சியாக குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் புத்துயிர் பெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் பெருகிவரும் மக்கள் தொகையால், 2000ம் ஆண்டிற்கு பிறகு வீடு உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்காக காடுகள், தோட்டங்கள், வயல்கள் பெருமளவு அழிக்கப்பட்டன. இதே போல் பறவையினங்களும், கண்முன்னே சப்தமின்றி அழிந்து வருகின்றன. இந்த நிலையில் தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள ஊர்களில் மீண்டும் பறவைகள் மற்றும் அரிய வகை மரங்களை பாதுகாத்திடவும், இழந்ததை மீட்டெடுக்கவும் குறுங்காடுகள் அமைக்கும் பணியில் கல்லூரிகள், பள்ளிகள், தன்னார்வலர்கள் இணைந்து ஆர்வமாக முன்னெடுத்து வர தொடங்கி உள்ளனர். இந்த முயற்சிகளுக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பெரும் ஊக்குவிப்பு தந்து தோள் கொடுத்து வருவது பாராட்டிற்குரியதாக உள்ளது.

கடந்த நூற்றாண்டுகளோடு ஒப்பிடும்போது இன்று 100 வகையான மரங்கள் இப்போது இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. எனவே இழந்த இயற்கை வளத்தை மீட்பதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் ஒரு கட்டமாக சுற்றுச்சூழல் துறை என்றே தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு மரங்கள் நடுவதும், இயற்கை வன வளத்தை பாதுகாக்கவும் தமிழக அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகளை ஊக்குவிக்கிறது. குறிப்பாக இயற்கை வளங்களை பாதுகாத்திட அர்ப்பணித்தவர்கள், இயற்கை ஆர்வலர்களை ஊக்குவித்து பாராட்டு பத்திரங்களையும், ஊக்கத்தொகைகளையும் அளித்து சிறப்பு கவுரவம் தந்து வருகிறது.

இதனால் இயற்கையை நேசிக்கும் தன்னார்வலர்கள் குழுக்கள் தேனி மாவட்டத்தில் அதிகமாகி வருகின்றனர். கொரோனா பேரிடர் காலத்திற்கு பின்பு, மீண்டும் மரம் நடுதல், குறுங்காடுகள் அமைத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு என அனைத்து ஊர்களிலும் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மீண்டும் அரிய வகை மரங்கள், அரிய வகை பூச்சிகள், பறவைகள் புத்துயிர் ஊட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தை பொருத்தவரை உத்தமபாளையம், கூடலூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி என இயற்கை வளங்களை பாதுகாக்கும் தன்னார்வலர்கள் அதிகமாக வருகின்றனர். இவர்களுக்கு ஊக்குவிப்பு அளிப்பதும், பணிகளை போற்றுவதும், தேனி மாவட்ட நிர்வாகம் ஊக்குவிப்புகளை தெரிவித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக குறுங்காடுகள் அமைத்தல் என்ற சிறப்பு பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 1 லட்சம் பனைமரம் வளர்ப்பு தேனி மாவட்டத்தில் வெற்றிநடை போட்டு, தேனியின் இயற்கை நேசர் நைனார் முகமது ஒருங்கிணைத்த களப்பணியால் 50 கண்மாய்களில் பனைமரம் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் குறுங்காடுகள் அமைத்தலும், தற்போது புதிதாக தன்னார்வலர்களை தட்டி எழுப்பி வருகிறது.

தேனி மாவட்டத்தில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பில் முதன்முறையாக, உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் குறுங் காடுகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த குறுங்காட்டில் 75 வகையான மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த மரங்களில் பறவைகளை அதிகம் இருக்கக்கூடிய கொடிகாப்புளி, அத்திமரம், நாவல் மரம், அரசமரம், மகிழ மரம், சீத்தா, மாதுளை மரம், கொய்யா மரம், மாமரம், உள்ளிட்டவை நடப்பட்டு பறவை இனங்களுக்காகவும், சிறு விலங்கினங்கள் வாழ்விற்காகவும் உருவாக்கப்பட்டு ஊக்குவிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மறுபுறம் பூச்சி இனங்களின் இனப்பெருக்கத்திற்காக பூ வகை மரங்களாக உள்ள செண்பகம், பவளவல்லி, மந்தாரை, மருதாணி, நந்தியால் வட்டம் மற்றும் செம்பருத்தி, பன்னீர் மரங்கள், நடப்பட்டு வருகின்றன. இதனால் தேனீக்கள் எடுப்பதற்காக பூச்சி இனங்கள் அதிக அளவில் உற்பத்தியாக கூடிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இந்த மரங்களை வளர்த்திட தேனி மாவட்ட தன்னார்வலர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களை ஊக்குவிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறுங்காடுகள் அமைப்பதன் மூலம் மீண்டும் அறிய வகை மரங்களை மீட்டெடுக்கவும், பறவை இனங்களை பெருகவும் வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது.

Related Stories: