×

ஊனமாஞ்சேரி சினிமா ஷூட்டிங்கில் பரபரப்பு ரோப் கயிறு அறுந்ததில் உதவி ஸ்டண்ட் மாஸ்டர் பலி: போலீசார் விசாரணை

சென்னை: வண்டலூர் அருகே விடுதலை சினிமா படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்ததில் உதவி ஸ்டண்ட் மாஸ்டர் பரிதாபமாக பலியானார். சென்னை ஜாபர்கான் பேட்டை, பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (59). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர், தமிழ் திரைப்படங்களில் உதவி சண்டை பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில், வண்டலூர் போலீஸ் அகாடமி அருகே ஏரி மற்றும் காட்டுப்பகுதிக்கு இடையே டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி நடிக்கும் ‘விடுதலை’ என்ற தமிழ் திரைப்பட ஷூட்டிங் கடந்த 6 மாதங்களாக நடந்து வருகிறது. இதில், தற்போது ஆங்காங்கே ரயில் தண்டவாளம் மற்றும் ரயில் பெட்டிகள் கவிழ்ந்தவாறு செட்டிங் அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல் நேற்றும் ஷூட்டிங் நடந்துள்ளது. இதில், ரயில் விபத்து ஏற்பட்டால் எப்படி ரயிலில் இருந்து இறங்கி தப்பித்து ஓடலாம் என்ற காட்சியின் ஒத்திகை மதியம் 2 மணி அளவில் நடந்துள்ளது. அப்போது ராட்சத கிரேனில் இருந்து திடீரென ரோப் கயிறு அறுந்தது. இதில், ஒத்திகையில் ஈடுபட்ட உதவி ஸ்டண்ட் மாஸ்டர் சுரேஷ் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். உடனே படப்பிடிப்பு குழுவினர் ஓடி வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய  சுரேஷை மீட்டு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : Anamancheri , Assistant Stunt Master Killed in Unamancherry Film Shooting: Police Probe
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...