கள்ளச்சந்தையில் விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 768 மதுபாட்டில்கள் பறிமுதல்: கணவர் சிக்கினார்; மனைவிக்கு வலை

தண்டையார்பேட்டை: காசிமேட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 768 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வடசென்னை பகுதிகளான காசிமேடு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். ஒரு சில பகுதிகளில் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கண்டும்காணாமலும் போலீசார் சென்று விடுகிறார்கள்.

இந்நிலையில், நேற்று காசிமேடு சிங்காரவேலன் 1வது தெருவை சேர்ந்த நீதிவாணன் (57), அவரது மனைவி மதுமாலா (47) ஆகியோர் சேர்ந்து டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு காசிமேடு பகுதியில் விற்பனை செய்வதாகவும், வீட்டில் மது விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் காசிமேடு காவல் ஆய்வாளர் ராஜேஷிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று சிங்காரவேலன் நகரில் உள்ள நீதிவாணன் வீட்டிற்கு சோதனைக்காக சென்றபோது காவல்துறையினர் வருவதை சற்று தூரத்திலேயே கண்டு கொண்ட நீதிவாணனின் மனைவி மதுமாலா கணவனை கழற்றிவிட்டு விட்டு நைசாக அங்கிருந்து தப்பியோடினார். இது, தெரியாமல் நீதிவாணன் போலீசில் மாட்டிக் கொண்டார்.

பின்னர், போலீசார் நீதிவாணனின் வீட்டை சோதனை செய்த போது 180 மி.லி அளவு கொண்ட 768 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதன்பேரில், அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு நீதிவாணனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைத்தனர். டாஸ்மாக் கடையிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி இரவு, காலை நேரத்தில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் கள்ளச்சந்தை மதிப்பு சுமார் 2 லட்சம் வரை இருக்கக்கூடும் என தெரிவித்தனர். மேலும் கணவரை கழற்றி விட்டு விட்டு ஓடிய காதல் மனைவி மதுமாலாவை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். காசிமேடு சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் விற்கப்படும் கள்ள மதுவிற்கு மதுமாலா தான் தலைவி எனவும் தெரியவந்துள்ளது.

Related Stories: