ரூ.24.17 கோடி சொத்துவரி நிலுவை வைத்துள்ள 39 உரிமையாளர்களின் முழு விவர பட்டியல் இணையதளத்தில் வெளியீடு: மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு ரூ.24.17 கோடி சொத்துவரி நிலுவை வைத்துள்ள 39 சொத்து உரிமையாளர்களின் முழு விவரங்கள் அடங்கியப் பட்டியல் மாநகராட்சியின் சார்பில் இணையதளத்தில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி கருதப்படுகிறது. சொத்துவரி, தொழில்வரி போன்ற வரிகள் மூலம் பெறப்படும் வருவாயை கொண்டு, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பொது மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குதல் போன்ற சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919, பிரிவு, 104ன்படி, ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரியானது, சொத்து உரிமையாளர்களால் செலுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட காலம் தாழ்த்தி சொத்துவரி செலுத்தப்படும் பட்சத்தில், செலுத்த வேண்டிய தொகையுடன் 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த, சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 15.12.2022 வரை தனிவட்டி ஏதும் விதிக்கப்படாமல் சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாதவர்கள் சொத்துவரி செலுத்த தவறியவர்களாக கருதப்படுவர். இருப்பினும், நடப்பு மற்றும் நிலுவை சொத்துவரி செலுத்த தவறியவர்களுக்கு, சென்னை மாநகராட்சியால், விழிப்புணர்வு ஏற்படுத்தி நிலுவை சொத்துவரியினை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு, 2022-23ம் நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வரை, ரூ.25 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்துவரி தொகை செலுத்தாமல் ரூ.24.17 கோடி அளவிற்கு நிலுவை வைத்துள்ள 39 சொத்து உரிமையாளர்களின் முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் சென்னை மாநகராட்சியின் சார்பில் இணையதளத்தில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் விவரங்களை https://chennaicorporation.gov.in/gcc/pdf/Defaulter_List.pdf என்ற இணையதள இணைப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: