அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7.70 லட்சம் நூதன மோசடி: வாலிபர் கைது

வேளச்சேரி: வேளச்சேரி விஜயநகரை சேர்ந்தவர் சதீஷ் (35). விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரைச் சேர்ந்தவர் சிவா. சதீஷின் நண்பர் ஒருவர் மூலம் இவர்களிடையே நட்பு ஏற்பட்டது. அப்போது, அவர் தனக்கு அரசு உயரதிகாரிகள் பலரை தெரியும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய சிவா தனக்கும், தனது மனைவிக்கும் அரசு வேலை வாங்கித் தருமாறு சதீஷிடம் கேட்டுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர், சென்னை மாநகராட்சி அல்லது அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிவா  தன் வங்கி கணக்கில் இருந்த ரூ.7.70 லட்சத்தை எடுத்து, சதீஷிடம் கொடுத்தார். சில வாரங்கள் கழித்து, அவரது மனைவிக்கு சென்னை மாநகராட்சியில் வேலை வழங்கியது போன்ற ஒரு போலி பணி நியமன கடிதத்தை சதீஷ் சிவாவிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில், சிவா அக்கடிதத்தை எடுத்து சென்று சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் கடந்த 2 வாரங்களுக்கு முன் காட்டி உள்ளார். அப்போது இது போலியானது என தெரிவித்துள்ளனர்.  

இதனால், அதிர்ச்சியடைந்த அவர், சதீஷிடம் தான் கொடுத்த ரூ.7.70 லட்சத்தை தருமாறு கேட்டுள்ளார். அவர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்ட சிவா, இதுதொடர்பாக, வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் இருந்த சதீஷை கைது செய்தனர். பின்னர், அவர்மீது ஏமாற்றுதல், பொய்யான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories: