குழந்தைகளின் ஆபாச வீடியோ விவகாரம் வியாபாரியின் வங்கி கணக்கை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

திருச்சி: குழந்தைகளின் ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள மணப்பாறை வியாபாரியின் வங்கி கணக்கை நேற்று மாலை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பணப்பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மணப்பாறை பூமாலைப்பட்டியை சேர்ந்த ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலர் சுப்பிரமணியன். இவரது மகன் ராஜா(45). இவர் 10 ஆண்டுகளுக்கு முன் லண்டன் சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பிரிவில் சில ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து, சொந்த ஊர் திரும்பிய அவர், திருப்பூரில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள வெப்சைட்டுகளுக்கு விற்று பல கோடி ரூபாய் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் சிபிஐக்கு தெரியவந்தது. ராஜா வீட்டில் சோதனை சிபிஐ அதிகாரிகள் (அயல்நாடு செயல்பிரிவு அதிகாரிகள்) டிச.1ம் தேதி வந்தனர். 14 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது ராஜாவின் லேப்டாப், செல்போன், கணினி, ஹார்டிஸ்க், பென்டிரைவ் ஆகியவற்றை எடுத்து சென்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் ஜவுளி வியாபாரி ராஜா வங்கி கணக்கு வைத்துள்ளார். ராஜாவின் வங்கி கணக்கை ஆய்வு செய்வதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை திடீரென அந்த வங்கிக்கு சென்றனர். சுமார், ஒரு மணி நேரத்திற்கு மேலாக வங்கியில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பல்வேறு நாடுகளில் இருந்து ராஜா பணம் பெற்றது தொடர்பான, ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

Related Stories: