புறவழி சாலை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்: பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

திருவையாறு: திருவையாறு அருகே சம்பா பயிரை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நெற் பயிரை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூர், திருவையாறு வழியாக 6.74 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. நெல், கரும்பு, வாழை, தென்னை மரங்கள், வெற்றிலைக் கொடிக்கால் அடங்கிய நிலங்களை அழித்து அதில் சாலை அமைக்கப்பட்டால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

தற்போது 150 அடி அகலம் கொண்ட சாலையில் 100 அடி அளவுக்கு செம்மண் நிரப்பப்பட்டு வருகிறது. அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர் பகுதியில் பல நூறு ஏக்கரில் சம்பா நெற் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களை அழித்து அதன் மீது பொக்லைன் இயந்திரங்களை கொண்டு செம்மண் கிராவல்கள் பரப்பப்படுகிறது. நெற்பயிரை அழிப்பதை பார்த்த விவசாயிகள் திரண்டு பொக்லைன் இயந்திரத்தை சிறப்பிடித்தனர். மேலும் நெற்பயிரை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு, அறுவடை முடியும் வரை இந்த சாலை அமைக்கும் பணி நடைபெற கூடாது என தெரிவித்தார். தகவல் அறிந்து வருவாய்த்துறையினர் வந்து, கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிவித்தனர். இதனால் அனைவரும் கலெக்டரை சந்திக்க சென்றனர். இதையடுத்து புறவழிச்சாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Related Stories: