அதிமுக ஆட்சியில் ரூ.78.74 லட்சம் வாங்கி 27 பேருக்கு போலி பணி ஆணை துணை கலெக்டர்-3 பேர் மீது வழக்கு: கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி: அதிமுக ஆட்சியில் 27 பேரிடம் ரூ.78.74 லட்சம் பெற்று அரசு வேலைக்கான போலி பணி ஆணை வழங்கியதாக விழுப்புரம் துணை கலெக்டர் உள்பட 4 பேர் மீது, கிருஷ்ணகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (39). இவர் நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.அலுவலகம் எதிரே நடந்த புகார் மேளாவில் பங்கேற்று, புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருந்ததாவது: கிருஷ்ணகிரி அம்மன் நகரில் வசித்து வரும் யாரப் பாஷா, ஓய்வுபெற்ற தாசில்தார் (நெடுஞ்சாலை) சண்முகம், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) இருந்து, தற்போது விழுப்புரம் மாவட்ட துணை கலெக்டராக (ஆதிதிராவிடர் நலத்துறை) பணியாற்றி வரும் ரகுகுமார், தேன்கனிக்கோட்டையில் தாசில்தாராக பணியாற்றி வரும் வெங்கடேசன் ஆகியோர், என்னுடன் சேர்த்து 27 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினர். அதற்காக கடந்த 1.10.2017ம் தேதி முதல் 31.12.2019 வரை (அதிமுக ஆட்சியில்) கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் மற்றும் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகில், மொத்தம் ரூ.78 லட்சத்து 74 ஆயிரம் பெற்றனர்.

அதன் பின்னர், பணி நியமன ஆணையையும் வழங்கினர். அந்த ஆணையை எடுத்துக்கொண்டு பணியில் சேர சென்ற போது, அவை போலியானது என தெரியவந்தது. எனவே, அவர்கள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், விழுப்புரம் மாவட்ட துணை கலெக்டர் ரகுகுமார் உள்பட 4 பேர் மீதும் 463 (போலியாக ஆவணம் தயாரித்தல்), 468 (ஏமாற்றும் நோக்கத்தோடு ஆவணம் தயாரித்தல்), 471 (போலி என தெரிந்தும், உண்மை என நம்ப வைத்து ஆவணங்களை வழங்குதல்), 420 (ஏமாற்றுதல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: