குஜராத்தில் பிரசாரம் ஓய்ந்தது 93 தொகுதிகளில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு: டிச.8ம் தேதி வாக்கு எண்ணிக்கை

அகமதாபாத்: குஜராத்தில் 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. 93 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. குஜராத் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு உட்பட 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 1ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் 63.30% வாக்குகள் பதிவாகி உள்ளள.  இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நாளை   93 தொகுதிகளில் நடை பெற உள்ளது. அங்கு நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.  

இந்த தொகுதிகளில் மொத்தம் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பாக, முதல்வர் பூபேந்திர படேலின் கட்லோடியா தொகுதி, ஹர்திக் படேல் விராம்காம் தொகுதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்படுகிறது. அன்றைய தினம் பிற்பகலுக்குள் குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது  யார்? என்ற விவரம் தெரிந்துவிடும். அதேபோல், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளும் டிச.8ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த 2 மாநிலத்திலும் பாஜ மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்று தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* உ.பி., ராஜஸ்தானில் நாளை இடைத்தேர்தல்

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில மெயின்புரி எம்பியுமான முலாயம் சிங் யாதவ், கடந்த சில வாரங்களுக்கு முன் காலமானார். இதனால் மெயின்புரி எம்பி தொகுதி காலியானது. இதே போல் காலியாக உள்ள ராம்பூர், கட்டவுலி எம்எல்ஏ தொகுதிகள், ராஜஸ்தானின் சர்தார்ஷாஹர் எம்எல்ஏ தொகுதி, பீகாரின் குர்ஹானி எம்எல்ஏ தொகுதி, சட்டீஸ்கரின் பானுபிரதாப்பூர் எம்எல்ஏ தொகுதி ஆகியவற்றிற்கு வரும் டிசம்பர் 5ம் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  

* மோடியை விமர்சிக்கவில்லை: கார்கே விளக்கம்

அகமதாபாத்தில் பிரசாரத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘மோடியை பார்த்து ஓட்டு போடுங்கள் என்கிறார். ராவணணை போன்று உங்களுக்கு 100 தலைகளா இருக்கிறது’ என்று பேசியிருந்தார். இதற்கு மோடி பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்களை பொறுத்தவரை அரசியல் என்பது தனிநபர்கள் பற்றியது இல்லை. அது கொள்கைகளை பற்றியது. அது பாஜவின் செயல்பாடுகளை பொறுத்தது. நான் எந்த தனிநபரை பற்றியோ, தனிப்பட்ட கருத்துக்களையோ கூறுவதுகிடையாது. ஏனென்றால் எனக்கும் நாடாளுமன்ற அரசியலில் 51ஆண்டுகள் அனுபவம் உள்ளது’ என்று தெரிவித்தார்.

* கோத்ரா ரயிலில் கல்வீசியவர்களுக்கு ஜாமீன் மறுப்பு

குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் தேதி ஏற்பட்ட கலவரத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கல் வீச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே 17-18 ஆண்டுகள்  சிறையில் இருந்ததால் அவர்களின் ஜாமீன் மனுக்கள் பரிசீலிக்கப்படலாம் என்று தெரிவித்தது. குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்த குற்றவாளிகள் ரயில் மீது கற்களை வீசியதால், எரியும் பெட்டியில் இருந்து மக்கள் தப்ப முடியவில்லை. இது வெறும் கல் வீச்சு வழக்கு அல்ல’ என்று எதிர்ப்பு தெரிவித்தார். கல்வீசி போராடியவர்களின் ஜாமீனை எதிர்க்கும் குஜராத் அரசுதான், இதே கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணியை கூட்டு பலாத்காரம் செய்து, அவருடைய 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தினர் 14 பேர் படுகொலை செய்த 11 குற்றவாளிகள், நன்னடத்தை அடிப்படையில் சமீபத்தில் விடுதலை செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: