4வது ஹாக்கி டெஸ்டில் ஆஸி. வெற்றி: தொடரை இழந்தது இந்தியா

அடிலெய்டு: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெறும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் 5-4, 2வது ஆட்டத்தில் 7-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வென்று முன்னிலை பெற்றது. 3வது ஆட்டத்தில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸியை வீழ்த்தியது. ஆஸி 2-1 என முன்னிலை வகிக்க, 4வது ஆட்டத்தில் வென்றால் சமநிலை எட்டுவதுடன் தொடரை கைப்பற்றும் வாய்ப்பையும் தக்கவைக்கலாம் என்ற இலக்குடன் இந்தியா நேற்று களம் கண்டது. அதற்கேற்ப இந்தியாதான் முதல் கோல் அடித்தது. தில்பிரீத் சிங் 24வது நிமிடத்தில் அசத்தலாக கோலடித்தார். அதன் பிறகு நிலைமை தலைகீழானது. ஆஸி. வீரர்கள் தொடர்ந்து கோல் மழை பொழிய ஆரம்பித்தனர். அந்த அணியின் ஹேவர்டு ஜெர்மி 28, 40வது நிமிடங்களிலும், வீட்டன் ஜேக் 29,  விக்ஹம் டாம் 33,  டவுசன் மேட் 53வது நிமிடங்களிலும் கோல் அடித்து அசத்தினர். அதனால் ஆஸி. 5-1 என்ற கோல் கணக்கில் 3வது வெற்றியை பதிவு செய்ததுடன் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5வது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது.

Related Stories: