சமூகத்தில் சம அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும்: ஜனாதிபதி முர்மு வேண்டுகோள்

புதுடெல்லி; சமூகத்தில் சம அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வேண்டுகோள் விடுத்தார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2021 மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: இந்திய மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமானோர் மாற்றுத்திறனாளிகள். அவர்கள் சுதந்திரமாக கண்ணியமான, வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பாகும். அவர்கள் நல்ல கல்வியைப் பெறுவதையும், அவர்களின் வீடுகளிலும், சமூகத்திலும் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்களின் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், சமமான வேலை வாய்ப்புகளைப் பெறுவதையும் உறுதி செய்வதும் நமது கடமை.

இந்திய கலாச்சாரம், பாரம்பரியத்தில் அறிவைப் பெறுவதற்கும், சிறந்து விளங்குவதற்கும் ஊனம் ஒரு தடையாக ஒருபோதும் கருதப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் தெய்வீக குணங்கள் கொண்டவர்களாக இருப்பதை பெரும்பாலும் காணலாம். நமது மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்கள் அசாத்திய தைரியம், திறமை மற்றும் உறுதியின் வலிமையால் பல துறைகளில் சாதனைகளை படைத்ததற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. சரியான சூழலில் போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால், அவர்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க முடியும். அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவது மட்டுமே அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: