டைரிகள் விலை 30 சதவீதம் உயர்ந்தது: ‘‘வாசனை டைரி’’ புதிதாக அறிமுகம்

நெல்லை: இந்தாண்டு டைரி விலைகள், 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. புதிய அறிமுகமாக ‘‘வாசனை டைரி’’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 2023ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு டைரிகள், காலாண்டர் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வருகிறது. உறவினர்கள், நண்பர்களுக்கு டைரி கொடுத்து வாழ்த்துக் கூறி மகிழ்வார்கள். மேலும் டைரி எழுதும் பழக்கம் உள்ளவர்களும், புதுவரவு டைரிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவர். இவர்களின்  ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் வித்தியாசமான டைரிகளை தயாரித்து அறிமுகப்படுத்துகின்றனர். கடந்த ஆண்டுகளில் மினி பேக் வகையிலான டைரியின் உள்பகுதியில் செல்போன் வைத்துக் கொள்ளும் வசதி, பேனா ஸ்டாண்டு போன்றவை அறிமுகமாகி  வரவேற்பை பெற்றன. இந்தாண்டு புதிய  அறிமுகமாக டைரியின் பக்கங்களை புரட்டினால் நறுமணம் கமழும் டைரி அறிமுகமாகி உள்ளது. வழக்கமான கூடுதல் வசதியுடைய டைரிகளும் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் டைரிகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ரூ.130 முதல் ரூ.150 வரையிலான விலையில் விற்கப்பட்ட டைரிகள் ரூ.200ஐ கடந்துள்ளது. மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு காரணமாகவிலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: