பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு: ரயில், விமான நிலையங்களில் கண்காணிப்பு

சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினம் டிச.6ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  கோவை ரயில்  நிலையத்திலும், விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக ஆளுநர் திருவண்ணாமலை செல்ல உள்ளார். மேலும், பல்வேறு முக்கிய பிரமுகர்களும் திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு செல்ல உள்ளனர்.

இந்நிலையில், நாளை இரவு முதல் திருவண்ணாமலை முழுவதும் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவிலிலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். . சென்னை விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தாம்பரம், ஆவடி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை இரவு முதல் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளை போலீசார் தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர்.

* போலீஸ் தீவிர கண்காணிப்பு

உணவு விடுதிகள், லாட்ஜ்கள் உள்ளிட்டவற்றில் சந்தேகத்துக்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா என்பதை கண்டறிய காவல்துறையினரால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்பட மக்கள் கூடும் வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் போலீசார் இப்போதே தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: