பிரபல ரவுடியை தீர்த்துக்கட்ட சதி திட்டம் 40 வெடிகுண்டு, துப்பாக்கியுடன் 2 ரவுடிகள் கைது: தப்பி ஓடியபோது விழுந்ததில் கை, கால் முறிந்தது

பெரம்பூர்: பிரபல ரவுடிகளை 40 நாட்டு வெடிகுண்டுகள், 40 கத்தி, அரிவாள் மற்றும் துப்பாக்கியுடன் போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை கொடுங்கையூர் குப்பைமேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. போலீசார் சோதனையில் கார் டிக்கியில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி, துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. காரில் இருந்த வர்களை பிடிக்க முற்பட்டபோது இரண்டு பேர் கீழே இறங்கி ஓட ஆரம்பித்தனர்.

குப்பைமேடு உள்ளே சென்று அங்கிருந்த கட்டிடத்தில் ஏறி தப்பிக்க முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை துரத்தி பிடிக்க சென்றபோது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். உடனடியாக, கொடுங்கையூர் போலீசார் அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அவர்களிடம் அங்கு விசாரணை செய்தபோது கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சூழல்புனல்கரை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்கின்ற வெள்ளை பிரகாஷ் (31) என்பதும், அவருடன் வந்த மற்றொரு நபர் செங்குன்றம் வடகரை அண்ணா தெருவைச் சேர்ந்த அப்பு என்கிற விக்ரமாதித்தன் (37) என்பதும் தெரிய வந்தது. இதில் வெள்ளை பிரகாஷ் மீது மூன்று கொலை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. விக்கிரமாதித்தன் மீது கடத்தல் வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளன.

வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் தமிழ்வாணன் உள்ளிட்ட அதிகாரிகள் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 2015ம் ஆண்டு வெங்கல் தாமரைப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் தென்னரசு என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் வெள்ளை பிரகாஷ் என்பவர் சம்பந்தப்பட்டிருந்தார். இதனால் உயிரிழந்த தென்னரசுவின் தம்பி புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாம் சரவணன் என்பவருக்கும் வெள்ளை பிரகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  

தென்னரசு கொலை வழக்கில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் பாம் சரவணன் உள்ளிட்ட நபர்கள் தன்னையும் கொலை செய்து விடுவார்கள் என்று எண்ணிய வெள்ளை பிரகாஷ் பாம் சரவணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்கெட்ச் போட ஆரம்பித்தார். அந்த வகையில், அவர் வருகிற புதன்கிழமை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பது தெரிய வந்தது. இதற்காக செங்கல்பட்டு நீதிமன்றம் சென்று அங்கு வைத்து எப்படி பாம் சரவணனை தீர்த்துக் கட்டலாம் என தனது நண்பர்களுடன் நீதிமன்ற வளாகத்தில் குறிப்பிட்ட இடங்களில் ஆட்களை எவ்வாறு நிறுத்துவது, எவ்வாறு தாக்குவது என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் பாம் சரவணன் அங்கிருந்து செங்கல்பட்டு ஆத்தூர் பகுதியில் உள்ள அவரது நண்பர் வீட்டுக்கு செல்வது வழக்கம். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர் தப்பித்து விட்டால் ஆத்தூர் பகுதியில் வைத்து அவரை எப்படி தீர்த்துக் கட்டுவது என்பது குறித்தும் அதற்கான இடங்களையும் தேர்வு செய்துள்ளனர். அதன் பிறகு சென்னைக்கு வந்து தனது நண்பர்களை பார்த்துவிட்டு கொடுங்கையூர் வழியாக செல்லும் போது வாகன சோதனையில் சிக்கியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஓடியபோது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் வெள்ளை பிரகாசுக்கு வலது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதேபோன்று அவருடன் வந்த விக்ரமாதித்தனுக்கு இடது கால் முறிந்தது. இருவரும் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது காரை முழுவதுமாக சோதனை செய்ததில் 40 நாட்டு வெடிகுண்டுகள், 40 அரிவாள் மற்றும் கத்திகள், ஒரு துப்பாக்கி, 16 தோட்டா உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கின்றனர். கைது செய்யப்பட்ட வெள்ளை பிரகாஷ் கொடுத்த தகவலின்படி, வியாசர்பாடி பிரசாந்த் என்ற ஜந்து பிரசாந்த் (25), கொடுங்கையூர் பிரதீப் குமார் என்கிற வாத்து (22), அருண் (21) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று மாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

* புதன்கிழமை கொலை சதி முறியடிப்பு

வரும் புதன்கிழமை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பாம் சரவணன் வழக்கு ஒன்றில் ஆஜராக இருந்தார். அப்போது, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வெளியே வைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி அவரை கொலை செய்ய வெள்ளை பிரகாஷ் திட்டம் தீட்டி இருந்தார். அதில் அவர் தப்பித்து விட்டால் துப்பாக்கியால் சுடவும் அதிலும் அவர் தப்பித்துவிட்டால் தனது ஆட்களை வைத்து கத்தியால் வெட்டவும் தயார் நிலையில் இருந்தனர். நீதிமன்ற வாசலில் தப்பித்து விட்டால் செங்கல்பட்டு ஆத்தூர் பகுதியில் வைத்து அவரை கொலை செய்யவும் தயார் நிலையில் இருந்துள்ளனர். அதற்குள் கொடுங்கையூர் போலீசார் அவர்களை பிடித்து விட்டதால் மிகப் பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

* வேலூர் சிறையில் நாட்டுகுண்டு பயிற்சி பெற்ற பிரகாஷ்

கொடுங்கையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள வெள்ளை பிரகாஷ் வழக்கு ஒன்றில் வேலூர் சிறையில் இருந்துள்ளார். அப்போது அந்த சிறையில் நாட்டு வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த சேகர் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சேகர் நாட்டு வெடிகுண்டுகளுக்கான மூலப் பொருட்கள் எங்கு வாங்குவது, அதனை எவ்வாறு தயார் செய்வது, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து வெள்ளை பிரகாஷிற்கு கற்றுக் கொடுத்துள்ளார். அதன் பிறகு வெளியே வந்த வெள்ளை பிரகாஷ் நாட்டு வெடிகுண்டுகளை தானே தயார் செய்து வைத்துள்ளார். மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகளை யாரும் இல்லாத இடத்தில் வெடிக்க செய்து அது வெடிக்கிறதா என்பதை சோதனை செய்து பார்த்துள்ளார். நாட்டு வெடிகுண்டுகள் சரியாக வெடித்த காரணத்தினால் பல நாட்டு வெடிகுண்டுகளை செய்து அதனை தான் செல்லும் இடங்களுக்கு பாதுகாப்புக்காக எடுத்து செல்வதை வெள்ளை பிரகாஷ் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

* 9 எம்.எம் பிஸ்டல்

வெள்ளை பிரகாஷ் காரில் இருந்து கொடுங்கையூர் போலீசார் துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். அது 9 எம்.எம் பிஸ்டல் வகையைச் சேர்ந்தது. துப்பாக்கியில் இருந்து 16 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கியை வெள்ளை பிரகாஷ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

* தொழில்போட்டியும் ஒரு காரணம்

புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாம் சரவணன் என்பவருக்கும் வியாசர்பாடியை சேர்ந்த தற்போது சிறையில் இருக்கும் நாகேந்திரன் என்பவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இரும்பு சம்பந்தப்பட்ட ஸ்ராப் தொடர்பான டெண்டர்களை எடுப்பது மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளை மேற்கொள்வதில் இருவருக்கும் தொழில் போட்டி இருந்துள்ளது. நாகேந்திரனின் வலது கரமாக திகழ்ந்தவர் வெள்ளை பிரகாஷ். எனவே பாம் சரவணனை தீர்த்து கட்டி விட்டால் வடசென்னை முழுவதும் நமது கண்ட்ரோலில் வந்துவிடும் என்று எண்ணிய வெள்ளை பிரகாஷ் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததற்கு தொழில் போட்டியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

* குப்பை கிடங்கில் வெடிகுண்டுகள் புதைப்பு

வெள்ளை பிரகாஷ் மற்றும் நண்பர் விக்கிரமாதித்தனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 40 நாட்டு வெடிகுண்டுகள் குறித்த தகவல்களை கொடுங்கையூர் போலீசார் சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு ஆய்வாளர் தனுஷ்கோடி தலைமையிலான போலீசாருக்கு தெரிவித்தனர். தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாட்டு வெடிகுண்டுகளை சோதனை செய்துவிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்க அதனை கொடுங்கையூர் குப்பை மேட்டில் உள்ள ஒரு பகுதியில் பத்திரமாக புதைத்தனர்.

* 50 லட்சத்தில் வீடு... சொகுசு கார்கள்...

கைது செய்யப்பட்டுள்ள வெள்ளை பிரகாஷ் கடந்த சில ஆண்டுகளாக கொடுங்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருப்பதில்லை. அச்சுறுத்தல் காரணமாக செஞ்சி பகுதியில் ரூ.50 லட்சத்தில் சொகுசு வீடு ஒன்றை வாங்கி அதில் இருந்து வந்துள்ளார். மேலும் பென்ஸ், ஆடி உள்ளிட்ட பலவகையான கார்களில் பந்தாவாக வலம் வந்துள்ளார். சமீபத்தில் சில கார்களை அவர் விற்றதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: