×

ஜனவரி முதல் ரூ.1500 கிடைக்கும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

* 4.39 லட்சம் பேர் பயனடைவர்
* வேலைவாய்ப்புகள் அமைத்து தர குழு
* வீட்டிலிருந்தே பணியாற்ற புதிய திட்டம்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த  பணியிடங்களைக் கண்டறிந்து வேலைவாய்ப்புகளை வழங்க, வல்லுநர் குழு அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குச்  சென்று பணி செய்ய வேண்டிய தேவை இல்லை; இல்லத்திலிருந்தே பணி செய்யலாம் என்ற  ஒரு சூழ்நிலையை உருவாக்கப் போகிறோம் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு ஒரு சிரமம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கக்கூடிய அரசாக நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் கோட்டையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் வாரியத்தினுடைய ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை நீங்களெல்லாம் அறிந்திருப்பீர்கள், மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். “ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடையக் கூடாது. ஒரே ஒருவருக்கு என்றாலும் நன்மை பயக்கும் என்று சொன்னால், அந்தச் செயலை நாம் உடனடியாக செய்தாக வேண்டும். இத்தகைய கருணை உள்ளத்தோடு இவர்களது நலம் காக்கப்பட வேண்டும், அதற்கு நாம் துணையாக நிற்போம் என்று நான் குறிப்பிட்டேன்.

அந்த அடிப்படையில்தான் தொடர்ந்து நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஊனமுற்றோர் என்று சொல்லக் கூடாது; அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரைக் கொடுத்து புதிய நம்பிக்கையை உருவாக்கியவர்தான் கலைஞர். மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையை உருவாக்கினார். உருவாக்கியது மட்டுமல்ல, அந்தத் துறையை தன் பொறுப்பிலே வைத்துக் கொண்டார்.  அவர் வழியிலே இன்று நானும் அந்த துறையை என் பொறுப்பிலே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.  இதன் மூலமாக இம்மக்கள் மீது நாங்கள் வைத்திருக்கக்கூடிய உண்மையான அக்கறையை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.

சென்னை மெரினா கடற்கரையில் கால்நனைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்து கொடுத்த ஏற்பாட்டை அனைவரும் அறிவீர்கள். அது மிகப்பெரிய செலவு பிடிக்கக்கூடிய திட்டம் அல்ல. ஆனால் அதனால் விளையும் பயன் என்பது எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் கிடைக்க முடியாத மகிழ்ச்சி என்பதை நீங்கள் மறந்துவிட கூடாது. ஒவ்வொரு தனிமனிதருக்கும் நன்மை அளிக்கும் அரசாகச் செயல்படுவோம் என்று ஆட்சி அமைந்த நேரத்தில் நான் எடுத்துச் சொன்னேன். அதற்கு இவைகளெல்லாம் சாட்சிகளாக அமைந்திருக்கிறது. தடைகளை வென்று சாதனை படைத்தவர்கள் பலர் இன்றைய நாளில் நம் தமிழ்நாட்டிலேயே இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் மாரியப்பன் தனது குறைகளை இளம் வயதிலிருந்தே எதிர்கொண்டு தடைகளை வெற்றிதடங்களாக மாற்றி, இப்போது நம் நாட்டிற்கே ஒரு பெருமையை தேடி தந்து கொண்டிருக்கிறார். முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள் முடங்கி விடக்கூடிய காலம் இருந்தது. ஆனால் இப்போது அதைத் தாண்டி, பொதுவெளியில் போராடி முன்னுக்கு வரத் தொடங்கி விட்டார்கள்.
ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி அந்த நாட்டினுடைய மனித வளத்தைப் பொறுத்தே அமையும். சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையும் இவ்வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகிக்கிறது.

எனவேதான், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிந்து வேலைவாய்ப்புகளை வழங்க, வல்லுநர் குழு மற்றும் உயர்மட்டக் குழுக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் சிறப்பாகவும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுத்திறனாளிகள் பணிக்கூடங்களில் பிறரை சாராமல் வேலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கும்.
மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குச் சென்று பணி செய்ய வேண்டிய தேவை இல்லை; இல்லத்திலிருந்தே பணி செய்யலாம் என்ற ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்கப் போகிறோம்.

அதற்குச் சான்றாகத்தான் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி, மென்பொருளுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய புதிய முயற்சியும் இங்கே அரங்கேற்றப்பட்டு உள்ளது. உலக மாற்றுத்திறனாளிகள் நாளில், ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். என்ன என்று ஓரளவுக்கு நீங்களும் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வருவாய் துறை மூலம் ஓய்வூதியம் பெற்றுவரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு, அவர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1ம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும்.

இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 263 கோடியே 58 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும். ஆடுகளை மேய்ப்பவர், ஒரே ஒரு ஆட்டை தனது தோளில் தூக்கி சுமந்து வருகிறார் என்றால், அந்த ஆடு நடக்க முடியாத நிலையில் இருக்கும். இதுதான் சமூகநீதி என்று எளிமையான விளக்கத்தை சொன்னவர் யார் தெரியுமா? நம்முடைய தலைவர் கலைஞர். அத்தகைய சமூகநீதிச் சிந்தனையின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் இந்த அரசானது, எப்போதும் எந்தச் சூழலிலும் அனைத்து மக்களின் அரசாக இருக்கும்! அதிலும் குறிப்பாக, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களின் அரசாக இருக்கும்! அவர்களுக்காகவே திட்டமிடும் அரசாக இருக்கும்! அவர்களில் ஒருவராக இருந்து அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அரசாகவே இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன், எம்எல்ஏ எழிலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர்.ஆனந்த குமார், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாற்று திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் ரெ.தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : Chief Minister ,M.K.Stal , Rs 1500 increase in disabled pension from January: Chief Minister M.K.Stal's announcement
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...