ரூ.56.30 லட்சத்தில் நூலகம், நியாயவிலை கடை திறப்பு: நல்ல திட்டங்களை தந்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்கிறார் முதல்வர்: அமைச்சர் காந்தி பேச்சு

ராணிப்பேட்டை: தமிழக முதல்வர் பல நல்ல திட்டங்களை தந்து தமிழக மக்களுக்காக உழைத்து வருகிறார் என்று, ராணிப்பேட்டையில் ரூ.56.30 லட்சத்தில் நூலகம், நியாய விலை கடை திறந்து வைத்து அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். ராணிப்ேபட்டை நவ்லாக் ஊராட்சியில் ரூ.41.80 லட்சம் மதிப்பீட்டில் சிப்காட் கிளை நூலக கட்டிடம் மற்றும் மணியம்பட்டு ஊராட்சியில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் நியாயவிலை கடையையும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி நேற்று திறந்து வைத்தார்.

திறப்பு விழாவிற்கு ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணி துறை செயற்பொறியாளர் சொக்கலிங்கம் வரவேற்றார். விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது: ஏற்கனவே இங்கு இருந்த நூலக கட்டிடத்தை பேராசிரியர் அன்பழகன் 1990ல் திறந்து வைத்தார். தற்போது திருமலை கெமிக்கல்ஸ் மல்லாடி டிரக்ஸ் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதியில் சிப்காட் கிளை நூலக கட்டிடம் புதுப்பித்து தற்போது திறந்து வைக்கப்பட்டது. ரூ.41.80 லட்சம் நிதி உதவி வழங்கிய தொழிற்சாலை நிறுவன அதிகாரிகளை பாராட்டுகிறேன்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது என்பர். அதுபோல் நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது. நூலக கட்டிடங்கள் திமுக ஆட்சியில் மதுரையில் ரூ.80 கோடியில் கட்டப்பட்டது, சென்னையில் நூலகம் என்று பல நூலகங்கள் கட்டப்பட்டது. இந்த நூலக கட்டிடத்தில் பள்ளி மாணவர்களுக்காக புத்தகங்கள் அதிக அளவில் நான் வழங்கி இருக்கிறேன். சிஎஸ்ஆர் சிறப்பு நிதி, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்காக நாம் நிறைய செய்து கொண்டிருக்கிறோம். மக்கள் நன்மைதான் முக்கியம். மக்கள் பாதிக்க கூடாது யார் தவறு செய்தாலும் நான் விடமாட்டேன்.

தற்போது மக்களாட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் பல நல்ல திட்டங்களை தந்து தமிழக மக்களுக்காக உழைத்து வருகிறார். முன்பு கொரோனாவை அடியோடு ஒழித்தார். இதனால் இந்திய அளவில் ஏன் உலக அளவில் அனைவரும் முதல்வரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்‌. முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் முதல்வர் மு.க ஸ்டாலின் சிறப்புடன் செயல்படுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: