லேப்டாப்பும் கையுமாக மணமகன் திருமண மேடையில் கூட ‘வொர்க் ஃப்ரம் ஹோமா?’.. சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு

கொல்கத்தா: திருமண மேடையில் மணமகன் ஒருவர் லேட்பாப்பும் கையுமாக வொர்க் ஃப்ரம் ஹோம் பணிகள் செய்து கொண்டிருந்தது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் போக்கு (வொர்க் ஃப்ரம் ஹோம்) தற்போது வரை நீடிக்கிறது. அதேபோல் ஆன்லைனில் திருமண நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

மணமகனும், மணமகளும் ெவவ்வேறு மாநிலம், நாடுகளில் இருப்பதாலும்,,குறித்த தேதியில் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பதாலும் செல்போன் வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொள்கின்றனர். வீடியோ காலில் மணமக்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கான திருமணச் சடங்குகளை செய்துமுடிக்கும் பழக்கமும் நடைமுறைக்கு வந்தது. இந்தத் திருமணம் சம்பிரதாயப்படி நடந்தாலும், சட்டப்படி மணமக்கள் நேரில் சென்றுதான் திருமணத்தைப் பதிவு செய்ய முடியும். இருந்தாலும், குடும்பத்தினரின் விருப்பத்திற்கு ஏற்ப ஆன்லைன் திருமணங்கள் நடக்கின்றன.

வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் நடைமுறை ஐடி துறைகளில் உள்ளதால், அந்தப் பணியில் இருப்பவர்கள் எந்த நேரமும் லேப்டாப்பும் கையுமாக அலைகின்றனர். எந்த நேரத்தில் இருந்தும் அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வருவதால், எந்நேரமும் பதிலளிக்க தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மணமகன், அவரது திருமண நாளில் மண்டபத்தில் அமர்ந்தபடியே லேப்டாப் மூலம் பணி செய்து கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மணமகன் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், திருமண சம்பிரதாயங்களை அவரது உறவினர்கள் செய்து கொண்டிருந்தனர். அவர்களுடன் 2 புரோகிதரும் அமர்ந்திருந்தனர். இந்த புகைப்படத்தை ‘கொல்கத்தா இன்ஸ்டாகிராமர்ஸ்’ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ‘வீட்டிலிருந்து வேலை செய்வதின் அடுத்த கட்டத்தை மணமகன் அடைந்துள்ளார்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலானதால், பலரும் வேடிக்கையான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் சிலர் இதுபோன்ற திருமணத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இவர்களின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது திருமணத்தை கூட சந்தோசமாக அனுபவிக்க முடியாத அளவுக்கு பணிச்சூழலை எதிர்கொள்கிறார் என்றும், இதுபோன்ற சூழல் கூடாது என்றும் கூறியுள்ளனர். மற்றொருவர், இந்தப் புகைப்படத்தை நான் வேடிக்கையாக பார்க்கவில்லை. எந்த ஒரு நிறுவனமும் தங்களது ஊழியர்களின் திருமண நாளில் வேலை செய்ய வற்புறுத்தக் கூடாது. வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் எவ்வாறு சமநிலையை ஏற்படுத்துவது என்பது குறித்து தெளிவான பார்வை வேண்டும்.

அதேநேரம், அந்த மணமகனும் தனது திருமண நாளை அந்த நிறுவனத்தினரிடம் தெரிவித்தாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். எப்படியாகிலும், திருமண வைபவம் என்பது மகிழ்ச்சியான தருணம் அல்லவா? அந்த நேரத்தில் பணி சார்ந்த நெருக்கடிகள் தேவையற்றது என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: