×

குஜராத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: 93 எம்எல்ஏக்கள் பதவிக்கு 833 வேட்பாளர்கள் போட்டி

அகமதாபாத்: குஜராத்தில் நாளை மறுநாள் 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இந்த தேர்தலில் 833 பேர் போட்டியிட்டுள்ளனர். வரும் 8-ம் தேதி இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

குஜராத் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 182 இடங்களுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 19 மாவட்டங்களுக்கு உட்பட 89 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 788 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். நேற்று முன்தினம் வெளியான அறிவிப்பில் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப்பட்ட நிலையில், நேற்று அதிகாரபூர்வமாக 63.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதே 2017 சட்டமன்றத் தேர்தலில், மேற்கண்ட 89 தொகுதிகளில் 66.75 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கிட்டத்தட்ட 3.61 சதவீத வாக்குகள் இந்தத் தேர்தலில் குறைந்துள்ளன.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நர்மதா மாவட்டத்தில் அதிகபட்சமாக 78.24 சதவீத வாக்குகள் பதிவாகின. போடாட் மாவட்டத்தில் மிகக் குறைந்தளவாக 57.58 சதவீத வாக்குகள் பதிவாகின. பத்து மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளும், ஆறு மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (டிச. 5) 93 தொகுதிகளில் நடைபெறுகிறது. மேற்கண்ட தொகுதிகளில் 69 பெண்கள் உட்பட 833 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். கடந்த முறையுடன் ஒப்பிடும் போது இம்முறை பெண்கள் சற்று அதிகமாகவே (2017ல் 61 பேர்) களத்தில் உள்ளனர்.

மேலும் எஸ்சி பிரிவில் 13 பேரும், எஸ்டி பிரிவில் 27 பேரும் போட்டியிடுகின்றனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதால், இன்று (டிச. 3) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் இறுதிகட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த 1995ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக, இந்த முறையும் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிர பிரசாரம் செய்தது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால், ஏழாவது முறையாக பாஜக ஆட்சி மீண்டும் அமைய தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2002ல் கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் தீவைப்பு சம்பவத்தின் மையப்பகுதிகளில் ஒன்றான நரோடா காமில் இருந்து கிட்டத்தட்ட 50 கி.மீ தூரத்திற்கு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் பிரசாரம் செய்தார். முதற்கட்ட வாக்குபதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. நாளை முதல் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோர் அனுப்பி வைக்கப்படுவர்.

நாளை மறுநாள் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் வரும் 8ம் தேதி 182 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் பிற்பகலுக்குள் குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற விவரம் தெரியவந்துவிடும். அதேபோல், இமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகளும் அன்றைய தினமே வெளியாகிறது. அந்த மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி உள்ளதால், அங்கும் அடுத்ததாக எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரிந்துவிடும்.

1 எம்பி, 5 எம்எல்ஏ தொகுதியிலும் தேர்தல்
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில மெயின்புரி  எம்பியுமான முலாயம் சிங் யாதவ், கடந்த சில வாரங்களுக்கு முன் காலமானார்.  அதனால் மெயின்புரி எம்பி தொகுதி காலியானது.

அதையடுத்து தலைமை தேர்தல்  ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்:
உத்தரபிரதேசத்தின் மெயின்புரி  எம்பி தொகுதி, காலியாக உள்ள ராம்பூர், கட்டவுலி எம்எல்ஏ தொகுதிகள்,  ராஜஸ்தானின் சர்தார்ஷாஹர் எம்எல்ஏ தொகுதி, பீகாரின் குர்ஹானி எம்எல்ஏ  தொகுதி, சட்டீஸ்கரின் பானுபிரதாப்பூர் எம்எல்ஏ தொகுதி ஆகியவற்றிற்கு  வரும் டிசம்பர் 5ம் தேதி (நாளை மறுநாள்) இடைத்தேர்தல் நடைபெறும்’ என்று அறிவித்தது.

மேற்கண்ட ஒரு எம்பி மற்றும் 5 சட்டசபை தொகுதிகளுக்கான பிரசாரமும் இன்று மாலையுடன் ஓய்கிறது. ெமயின்புரி எம்பி ெதாகுதியில், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் ரகுராஜ் சிங் ஷக்யா களம் இறக்கப்பட்டுள்ளதால் அங்கு பலமான போட்டி ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Tags : Gujarat , Gujarat, election campaigning is over, second phase of polling,
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...