பள்ளியின் கழிவறையை மாணவர்களை சுத்தம் செய்ய வைத்த ஹெச்.எம். கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி பாலக்காரையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 35 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2 கழிவறைகள் உள்ளன. அதில், ஒன்றை மாணவ-மாணவிகளும், மற்றொன்றை ஆசிரியைகளும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த கழிவறைகளை தலைமையாசிரியையின் உத்தரவின்பேரில் மாணவ-மாணவிகளே சுத்தம் செய்து வந்துள்ளனர். இதனால் பட்டியல் இன மாணவன் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவனின் பெற்றோர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியில் பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், பள்ளியின் கழிவறையை மாணவ-மாணவிகள் சுத்தம் செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பள்ளியின் தலைமையாசிரியையான கீதாராணி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் பெருந்துறை போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தலைமையாசிரியை கீதா ராணியை இன்று பெருந்துறை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: