சலூனில் ஊழியர்களை தாக்கி பணம் பறித்த பாக்சர் கைது

பெரம்பூர்: சலூன் கடையில் ஊழியர்களை தாக்கி பணம் பறித்த பாக்சர் கைது செய்யப்பட்டார். சென்னை புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் சலூன் கடை நடத்துபவர் சத்தியபாலன். இவரது கடைக்கு கடந்த 25ம்தேதி புளியந்தோப்பு டோபிகானா பகுதியை சேர்ந்த பாக்சர் பிரசாந்த் என்பவர் வந்துள்ளார். பின்னர் அவர் கடையில் இருந்த ஊழியர்களிடம், ‘’கடை முதலாளி எங்கே’’ என்று கேட்டதுடன் அங்கிருந்த பணியாட்களை தகாதவார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. அத்துடன் பணம் கேட்டு ஊழியர்களை சரமாரியாக தாக்கிவிட்டு மாதந்தோறும் கண்டிப்பாக மாமூல் தரவேண்டும் என்று கூறிவிட்டு பிரசாந்த் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இதன் அடிப்படையில், சலூன் கடை உரிமையாளர் கொடுத்த புகாரின்படி, புளியந்தோப்பு போலீசார் வழக்குபதிவு செய்து பிரசாந்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் மறுநாள் காலை வரும்படி அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தனர். ஆனால் மறுநாள் அவர் காவல்நிலையத்துக்கு வரவில்லை. இதையடுத்து அவரை தேடி வந்த நிலையில், நேற்றுமுன்தினம் பாக்சர் பிரசாந்தை கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: