உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதல்வர்!

சென்னை: இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் நலனைக் பேணிக் காத்திட முத்தமிழறிஞர் கலைஞர் இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனி துறையை உருவாக்கி, அவர்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகம் கவனம் செலுத்தி பல்வேறு  நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 பராமரிப்புத் தொகை, மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளர் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதி, திருமண உதவித்தொகை, வேலைவாய்ப்பின்மைக்கான உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தியதற்காக,  இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களால் தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி இன்று நடைபெற்ற விழாவில்,  மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவைபுரிந்ததற்காக சிறந்த சமூகப் பணியாளர் விருதினை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி ஜெயந்தி உதயகுமார் அவர்களுக்கும், சிறந்த நிறுவனத்திற்கான விருதினை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இன்டேக்ட் சிறப்புப் பள்ளி அறக்கட்டளைக்கும், சிறந்த ஆசிரியருக்கான விருதினை மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்ததற்காக தேனி மாவட்டம், லூசிகிரசன்சியா சிறப்புப் பள்ளி மற்றும் தொழில் பயிற்சி மையத்தைச் சேர்ந்த சகோதரி ம. கவிதா அவர்களுக்கும், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்ததற்காக சென்னை, மயிலாப்பூர், சி.எஸ்.ஐ. காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியின் வி.ஜேம்ஸ் ஆல்பர்ட், பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கு கற்பித்ததற்காக சென்னை, சிறுமலர் பார்வைத்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த செல்வி கொ. மார்க்ரெட் அவர்களுக்கும், சிறந்த பணியாளர்/ சுயதொழில் புரிபவர் விருதினை ஜோ.சரஸ்வதி, தி.சே.அறிவழகன், சி.ஆர்.பாலாஜி, மு.சுந்தரம், செல்வி.இ.அ.நிவேதா, வா.கலைவாணி, செல்வி அன்னமேரி, பொ.பொம்மண்ணன் ஆகியோருக்கும்.

மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருதினை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அமர் சேவா சங்கத்தின் சுலோசனா கார்டன்ஸ் நிறுவனத்திற்கும், ஆரம்பநிலை பயிற்சி மைய சிறந்த ஆசிரியருக்கான விருதினை செவித்திறன் குறைபாடுடையோருக்கு கற்பித்ததற்காக காஞ்சிபுரம், தமிழ்நாடு அரசு செவித்திறன் குறையுடைய இளம் சிறார்களுக்கான இலவச ஆரம்பநிலை பயிற்சி மையத்தை சேர்ந்த எஸ். சித்ரா அவர்களுக்கும், மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்ததற்காக கோயம்புத்தூர், வித்யா விகாஸினி வாய்ப்புப் பள்ளியின் பா.வி. ஜோதி ஆகியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழல் அமைத்த சிறந்த அரசு நிறுவனத்திற்கான விருதினை கோட்டூர்புரம்-அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கும், சிறந்த தனியார் நிறுவனத்திற்கான விருதினை திருச்சிராப்பள்ளி-தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் திருச்சிராப்பள்ளிக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநருக்கான விருதினை E. செந்தில்குமார், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய நடத்துநருக்கான விருதினை எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, பாராட்டினார். விருது பெற்ற நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கௌரவித்தார்.  

    

மேலும், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய திறன் பயிற்சியை  தொடங்கி வைக்கும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று, முதற்கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிடும் அடையாளமாக 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி, புகழ்பெற்ற கணினி நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் ஒரு வழிகாட்டியை (Mentor) அமர்த்தி, இந்திய மென்பொருள் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்க்காம் (NASSCOM) மூலம் மென் பொருள் திறன் பயிற்சியை வழங்கி வேலைவாய்ப்பினை பெற்று தருகிறது.

முன்னதாக, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 6 புதிய மாவட்டங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவுக்கான வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.

மேலும், ஊதா அங்காடி மற்றும் நவீன உதவி உபகரணங்களுக்கான கண்காட்சியினை முதலமைச்சர் திறந்துவைத்து பார்வையிட்டார். இவ்விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா. எழிலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் ஆர். ஆனந்த குமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசன்ட் திவ்யா,  மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மற்றும் நல வாரியக் குழு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: