சிவகங்கை நகர தெப்பக்குளத்தில் ரூ.5 கோடி செலவில் பராமரிப்பு பணி: நகர்மன்ற தலைவர் தகவல்

சிவகங்கை: சிவகங்கை நகர தெப்பக்குளம் ரூ.5 கோடி செலவில் பராமரிப்பு செய்யப்பட உள்ளது என நகர் மன்ற தலைவர் சிவகங்கை நகரின் மையப்பகுதியில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவுள்ள தெப்பக்குளம் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. 1985ல் மாவட்டத்தின் தலைநகராக சிவகங்கை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இங்கு பல்வேறு அரசு அலுவலகங்கள், பொதுமக்களுக்கான குடியிருப்புகள், விரிவாக்கமடைந்து வரும் எல்கைப்பகுதிகள் என நகர் வளர்ச்சியடைந்து வருகிறது. தற்போது சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் இங்குள்ள தெப்பக்குளம் மக்களின் அன்றாட பயன்கள், கோவில் சடங்குகள், இறப்பு சடங்குகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்பட்டு வருகிறது.

மேலும் குளத்தில் நீர் இருந்தால் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு ஆழ்குழாய் அமைக்கும் போது நிலத்தடி நீர் பிரச்னை இருக்காது. பல ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் இருந்த சேறும், சகதியும் கடந்த 2013ம் ஆண்டில் அகற்றப்பட்டது. 2018ம் ஆண்டில் பராமரிப்பு பணிகள் நடந்தது. ஆனால் சிவகங்கை நகரில் கூடுதல் மழை பெய்தாலும் தெப்பக்குளத்திற்கு முழுமையான நீர் வரத்து இல்லை. தெப்பக்குளத்திற்கு வரக்கூடிய மழை நீர் சேகரிப்பு பகுதியான காஞ்சிரங்கால் கிராமம், புதூர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் பகுதி முழுவதுமிருந்து மழை நீர் செட்டியூரணி வந்து அங்கிருந்து தெப்பக்குளம் செல்கிறது.

தற்போது மழை நீர் செல்லும் பகுதிகளில் கலெக்டர் அலுவலகம் மற்றும் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு முழுமையான குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது. இதனால் மழை பெய்தாலும் வரத்து கால்வாய்கள் சரி வர இல்லாததால் தெப்பக்குளத்திற்கு கூடுதல் நீர் வருவதில்லை. இந்நிலையில் தற்போது ரூ.5 கோடி செலவில் இரண்டு ராட்சத போர் அமைத்தல், தெப்பக்குளத்தை சுற்றிலும் நடை மேடை, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ள பகுதிகளில் புதிய சுவர் கட்டுதல், இரண்டு ஹைமாஸ் விளக்குகள் மற்றும் சுற்றிலும் பராமரிப்பு பணி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்க உள்ளன.

இதுகுறித்து நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த் கூறும்போது, நகரின் மையப்பகுதியில் உள்ள தொப்பக்குளத்தில் மழை நீர் தேங்காமல் கழிவு நீர் கலக்கும் நிலை உள்ளது. இதை சரிசெய்யவும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், தெப்பக்குள பராமரிப்பிற்காக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது நடை மேடை உள்ளிட்டவைகளுக்கான வடிவமைப்பு செய்தல் உள்ளிட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நிதி ஒதுக்கீடு வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

Related Stories: