கிருஷ்ணகிரி அருகே அகரம் கிராமத்தில் 300 ஆண்டு பழமையான நடுகல் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தில் 300 ஆண்டு பழமையான தமிழகத்தின் மூன்றாவது ஏறுதழுவுதல் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏறுதழுவுதல் வீர விளையாட்டு பண்டைய தமிழர்களால் போற்றப்பட்டு வந்ததை சங்க இலக்கியங்கள் சிறப்பித்து பேசுகின்றன. 5 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட சிந்து சமவெளி காலத்திலேயே இவ்விளையாட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

சங்க காலத்தில் கால்நடைகள் முக்கிய செல்வமாகக் கருதப்பட்டன. பயிர்த்தொழில், போக்குவரத்து மற்றும் உணவுப்பொருள் அனைத்துக்கும் மக்கள் கால்நடைகளையே பெரிதும் சார்ந்து வாழ்ந்தனர். ஏறுதழுவுதல், ஆநிரைக்கவர்தல்(கால்நடைகளை களவாடுதல்), ஆநிரை மீட்டல் என தமிழர் வாழ்வியலில் இரண்டர கலந்துவிட்டவை கால்நடைகள். அக்காலத்தில் காளையை அடக்கும் இளைஞனே மாவீரனாகக் கருதப்பட்டான். இவ்வளவு சிறப்புமிக்க ஏறுதழுவுதலை சங்க இலக்கியங்கள் போற்றினாலும் அதுகுறித்த நடுகல் தடயங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

சேலம் அரசு அருங்காட்சியகம், ஆத்தூர் கருமந்துறையிலிருந்து கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டு, வீரன் எருது விளையாடி பட்டான் என குறிப்பிடுகிறது. மற்றொரு ஏறுதழுவும் நடுகல் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் அருகே கிடைத்துள்ளது. இதற்கு அடுத்து தமிழகத்திலேயே மூன்றாவதாக, தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தில், ஏறுதழுவும் நடுகல்லை கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, பாறை ஓவிய ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமாரின் வழிகாட்டுதலின் பேரில், மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: காடுகளும், மலைகளும் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கால்நடை வளர்ப்பு, ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் ஆகியவற்றை குறிக்கும் வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களும், வரலாற்றுக்கால நடுகற்களும் ஏராளமாய் கிடைத்தபோதும், தனிச்சிறப்பு வாய்ந்த ஏறுதழுவும் நடுகல் அறியப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அகரம் கிராமத்தில் தென்னந்தோப்பில் அரியவகை ஏறுதழுவும் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 300 ஆண்டு பழமையான இக்கல்வெட்டில், காளையானது பக்கவாட்டில் முன்னங்காலை தூக்கி ஓடுவதுபோல் காட்டப்பட்டுள்ளது. அதற்கு பின்னால், அக்காளையை அடக்க முற்படும் வீரன் காளையின் திமிலை இறுக பற்றி காளையின் முன்னங்காலில் தனது கால்களை பின்னிக் கொண்டு தொங்குகிறான். இதனால் காளையின் நாக்கு வாய்க்கு வெளியே தொங்குகிறது. ஏறு தழுவுதல் என்னும் சொல்லுக்கேற்ப இந்த நடுகல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.

5 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழகத்தில் ஏறு தழுவுதல் உள்ளிட்ட வீர விளையாட்டுப் போட்டிகள் நடந்ததாக பல்வேறு வரலாற்று சான்றுகள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது 300 ஆண்டுக்கு முற்பட்ட ஏறு தழுவுதல் நடந்ததற்கான கல்வெட்டை கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்கள் பாரம்பரியமாக நடந்து வந்துள்ளதையே இக்கல்வெட்டுகள் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுப்பணியில், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சரவணகுமார், ராமச்சந்திரன், பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: