இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம்; ஊனத்தை உதறி தள்ளிவிட்டு உலகம் சுற்றும் பெரம்பலூர் வாலிபர்: தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை

பெரம்பலூர்: இன்று (3ம் தேதி) உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் நேரத்தில், ஊனத்தை உதறி தள்ளிவிட்டு பெரம்பலூர் வாலிபர் உலகம் சுற்றி வருகிறார். ஊனமுற்றவர்களை பழித்ததால் மனதளவில் ஊனமானவர்களே அதிகமாகி உள்ளனர். உடலில் தெரிவது ஊனமல்ல. மனதிலிருப்பதே ஊனம். இவர்களுக்காகவே தான் ஊனமுற்றோர் நலத்துறை என்றிருந்த துறையை மரியாதைப்படுத்தும் விதமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என மாற்றி அரசாணையை பிறப்பித்தார். இதனால் பலரும் தன்னம்பிக்கை கொண்டு வாழ்வில் முன்னேறி வருகின்றனர். அந்த வகையில் ஊனத்தை உதறித்தள்ளி உயர்ந்தவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளனர்.

பெரம்பலூர் அருகேயுள்ள மேலப்புலியூரை சேர்ந்தவர் கலைச்செல்வன்(38). 11 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இடதுகையை முழுமையாக இழந்தவர், தன்னம்பிக்கையை இழக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகளில் மாவட்ட அளவில், மண்டல அளவில், மாநில அளவில் சாதித்த கலைச்செல்வன் இந்தியாவில் 19 மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

கடந்த நவம்பர் 11,12,13 தேதிகளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்று திரும்பியுள்ளார். இதுவரை கலைச்செல்வன் தேசிய அளவில் 2 தங்கம், மாநில அளவில் 6 தங்கம் என 8 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். கபாடி போட்டியில் தமிழகஅணி சார்பாக 4 முறை விளையாடி 2021 ல் தமிழக அணி தேசிய அளவில் முதலிடம் பெறக் காரணமாக சாதித்துக் காட்டியுள்ளார்.

இதுவரை 400 மாரத்தான் போட்டிகளில் பொது பிரிவில் பங்கேற்று 100க்கும் மேலான தடவைகளில் டாப்டென் எண்ணிக்கைக்குள் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். குறிப்பாக தடகள விளையாட்டுப் போட்டிகளில் தனி ஆளாகக் களமிறங்கி, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டம் என உலகத்தை சுற்றிவந்து இதுவரை 250 மெடல்களை வாங்கிக் குவித்துள்ளார். கூட்டுறவுத்துறையின்கீழ் இயங்கும் பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடையில் கட்டுநராக வேலைபார்த்து வருகிறார்.

அதேபோல், மங்களமேடு கிராமத்தை சேர்ந்த அம்பிகா(35). 3 அடி உயரமேயுள்ள இவர் குள்ளத்தை மறைத்து பதக்கங்களால் பலரது உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் பெண். அசாமில் நடந்த 100மீட்டர் நீச்சல் போட்டியில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர். இதேபிரிவில் 50மீட்டர் நீச்சல் போட்டியில் அம்பிகா வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். ஆணுக்கு நிகராக பெண்ணும் சளைத்தவரல்ல என்பதுபோல் அம்பிகாவும் தேசியஅளவில், மாநில அளவில், தென்னிந்திய அளவில் நடந்த போட்டிகளில் விளையாடி 200க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஊனத்தை உதறித்தள்ளி உலகில் மட்டுமல்ல, உள்ளத்திலும், உணர்விலும் உயர்ந்து நிற்பவர்கள், ஊனமில்லாதவருக்குக்கூட உதாரணமாகத்திகழ்வது மேலும் சிறப்பு.  இவர்களை அடையாளம் கண்டறிந்து ஆயுள் முழுக்க பயனுள்ள நலத்திட்ட உதவிகளை மத்திய மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் ஆகியன வழங்கி கவுரவிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Related Stories: