போலீஸ் வாகனத்தை திருடிச் சென்று வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் கைது

கருங்கல்: கருங்கலில்  போலீஸ் வாகனத்தை திருடிச்சென்று  பணம்  பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். குமரி மாவட்டம் கருங்கல்  பஸ் நிலையம் அருகே பெருமாங்குழி  பகுதியை  சேர்ந்தவர் அஸ்வின்(38). நேற்று முன்தினம் மாலை இவர் தனது நண்பருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது  அவர்களை, ஒரு போலீஸ் வாகனத்தில் வந்த 4 பேர் வழிமறித்தனர்.   அவர்கள் தங்களை கிரைம்பிராஞ்ச் போலீசார் என கூறி, அஸ்வினிடம் இருந்து  2,200 ரூபாயை பறித்தனர். சந்தேகமடைந்த அஸ்வின் தனது செல்போனில்  போலீஸ் வாகனத்தையும், அதில் வந்தவர்களையும் நைசாக படம்பிடித்தார். இது  குறித்து கருங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் குலசேகரம் காவல்  நிலையத்துக்கு சொந்தமான அந்த வாகனம் பழுது பார்ப்பதற்காக மார்த்தாண்டம் அருகே சிராயன்குழியில் உள்ள  ஒர்க்‌ஷாப்பில் விடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த போலீஸ் ஜீப்பை காஞ்சிரகோடு  பகுதியை சேர்ந்த விஷ்ணு(27), ரூபன்(38), போஸ்கோ டைசின்(38) மற்று ஹிட்லர் (45) ஆகியோர் திருடி சென்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள்  சிராயன்குழி ஒர்க் ஷாப் உரிமையாளரின் நண்பர்கள் ஆவர். போலீஸ் ஜீப்பை பயன்படுத்தி பைக்கில் வந்த அஸ்வினை மிரட்டி பணம் பறித்துவிட்டு இரவில் நன்றாக குடித்துவிட்டு  மட்டையாகிய விஷ்ணு, ரூபன், போஸ்கோ ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  இதில் ஹிட்லர் என்பவர் தப்பியோடி விட்டார்.இவர் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.   அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: