கொடூரமாக தாக்கி வாலிபரை கொன்றது அம்பலம்; சென்னை காதலி, 4 பேர் கைது

கொடைக்கானல்: கொடைக்கானலில் தென்காசி வாலிபர் கொலையில், சென்னையை சேர்ந்த காதலி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசி, சக்தி நகரை சேர்ந்தவர் சூர்யா (30). இசை கம்போசிங் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தார். சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் ஸ்வேதா (25). ஆன்லைனில் யோகா பயிற்சி நடத்தி வந்துள்ளார். இருவரும் சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் சூர்யா, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்வேதா, சென்னையில் இருந்து கொடைக்கானல் வந்து சூர்யாவுடன் தங்கி இருந்துள்ளார்.

நவ.30ம் தேதி இரவு இருவருக்கும் இடையே பழைய சம்பவங்களை நினைவுபடுத்தியதில் தகராறு ஏற்பட்டு சூர்யா, ஸ்வேதாவை தாக்கியுள்ளார். இதையடுத்து ஸ்வேதா, தனது நண்பரான கொடைக்கானலில் உள்ள மதுரையை சேர்ந்த கவுதமை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். உடனே அவரும், தனது நண்பர்கள் 3 பேருடன் அங்கு வந்தார். அங்கு சூர்யா காயங்களுடன் கீழே கிடந்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்டு கொடைக்கானல் ஜிஹெச்சில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சூர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலி ஸ்வேதாவின் நண்பர் கவுதம் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (27), கொடைக்கானலை சேர்ந்த பராந்தக சோழன் (25), அகில் அகமது (25) ஆகிய 4 பேரும் சூர்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை உருட்டுக்கட்டை மற்றும் கைகளால் தாக்கி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சூர்யாவை கொன்றதாக ஸ்வேதா, கவுதம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பராந்தக சோழன், அகில் அகமது ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலையான சூர்யா முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரின் உறவினர் என கூறப்படுகிறது.

Related Stories: