×

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் ரூ.108 கோடி முதலீடு புளூமேக்ஸ் கேபிட்டல் நிறுவன இயக்குநர்கள் 4 பேர் கைது; அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: பொதுமக்கள் முதலீடு செய்த ரூ.108 கோடியை வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்த வழக்கில் புளூமேக்ஸ் கேபிட்டல் நிறுவனத்தின் இயக்குநர்கள் 4 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மதுரையை தலைமையிடமாக புளூமேக்ஸ் கேபிட்டல் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்திற்கு இயக்குநர்களாக  ஆர்.அரவிந்த், எஸ்.கோபாலகிருஷ்ணன், எஸ்.பரத்ராஜ் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த அமர்நாத் உள்ளனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக பொதுமக்களுக்கு விளம்பரம் செய்துள்ளனர். அதை நம்பி மதுரை உள்பட தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் பல நூறு கோடி பணத்தை பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால், சொன்னபடி முதலீடு செய்த மக்களுக்கு பணத்தை தரவில்லை. இதற்கிடையே கடந்த 2020-21ம் ஆண்டு புளூமேக்ஸ் கேபிட்டல் சொல்யூஷன் நிறுவனத்தை அந்த நிறுவன இயக்குநர்கள் மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்தின் மீது புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் விசாரணை நடத்திய போது, பொதுமக்களிடம் இருந்து ஏமாற்றிய ரூ.108 கோடி பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்து ஏமாற்றியது தெரியவந்தது. அதேநேரம், சட்டவிரோத பண பரிமாற்றம் செய்யப்பட்டதால் இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில், இந்த மோசடி நிறுவனத்தின் இயக்குநர்கள், பொதுமக்கள் பணத்தை அந்நிய செலாவணி வர்த்தகத்தில் முதலீடு செய்தது போன்று போலியான இணைய தளத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றி, அந்த பணத்தை 4 இயக்குநர்களும் தங்களது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் இங்கிலாந்து, ஹாங்காங், துபாய், பெலிஸ் போன்ற நாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் புளூமேக்ஸ் கேபிட்டல் நிறுவனத்தின் இயக்குநர்களான ஆர்.அரவிந்த், எஸ்.கோபாலகிருஷ்ணன், எஸ்.பரத்ராஜ் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த அமர்நாத் ஆகியோரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Blumax Capital , 4 directors of Bluemax Capital arrested for illegal investment of Rs.108 crore abroad; Enforcement action
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...