×

சக மாணவர்கள் முன் ஆசிரியர் அடித்ததால் விரக்தி, பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை; கொட்டிவாக்கத்தில் பரபரப்பு

சென்னை: போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடிதம் எழுதி வாங்கி மிரட்டியதால்,  பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக, போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்னை  நீலாங்கரையில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை  கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரை குப்பம் பகுதியை சேர்ந்த சென்னை மாநகராட்சி பணியாளரின் மகன்கள் குமார் (16), தரண் (13). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).  கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை  நாடார் பள்ளியில் குமார் 12ம் வகுப்பு படித்து வந்தான். தரண் 9ம்  வகுப்பு படிக்கிறான்.  இந்நிலையில், பள்ளியில் பாடம் நடத்தும்போது  தரண் சிறிது நேரம் மேஜையில் படுத்துள்ளான். இதை பார்த்த ஆசிரியர்  செல்லப்பாண்டியன் அடித்துள்ளார். தன்னை ஆசிரியர் அடித்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். பின்னர் பெற்றோர் பள்ளிக்கு சென்று பள்ளி  முதல்வரிடம் கேட்டு சத்தம் போட்டுள்ளனர்.

இதற்கிடையே, கடந்த  திங்கட்கிழமை பள்ளிக்கு சென்ற குமார் செவ்வாய், புதன்கிழமை விடுமுறை  எடுத்து விட்டு நேற்று முன்தினம் வழக்கம் போல்  பள்ளிக்கு சென்றுள்ளான்.  அப்போது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேசன், அவனை அழைத்து,  ‘‘நீ  பள்ளியில் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறாய்’’ என்று கூறி, சக மாணவர்கள்  முன்பு சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் சரமாரியாக அடித்து கடிதம்  ஒன்றை எழுதி, அதில் கையெழுத்து  வாங்கி உள்ளார். இதனையடுத்து, பள்ளி  நிர்வாகம் சார்பில், குமாரின் பெற்றோருக்கு போதைப்பொருட்களான ஆன்ஸ்  புகையிலை பயன்படுத்துவதாக  தகவல் தெரிவிக்கப்பட்டு பள்ளிக்கு  அழைத்துள்ளனர். பின்னர் பள்ளிக்கு சென்ற குமாரின் பெற்றோர்  தன் மகனை  அடித்தது குறித்து கேட்டுள்ளனர்.

நேற்று காலை குமார் வழக்கம்போல்  பள்ளிக்கு செல்ல, ரெடியாகி வருகிறேன் எனக்கூறி விட்டு, தனது அறைக்கு  சென்றுள்ளான். ஆனால்,  வெகுநேரம் ஆகியும் அவன் வெளியே வராததால், சந்தேகம்  அடைந்த தந்தை கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாக தட்டியும்  கதவு  திறக்கப்படவில்லை. இதனால் ஜன்னல் வழியாக, அவர் பார்த்தார். அப்போது  பெட்ரூமில் உள்ள மின்விசிறியில் குமார் வேட்டியால் தூக்கில் தொங்கியதை  பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவனை மீட்டு நீலாங்கரையில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு   சிகிச்சை பலனின்றி அவன்  பரிதாபமாக உயிரிழந்தான்.  தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ  இடத்துக்கு விரைந்து சென்று,  மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் தற்கொலை செய்ததால் அவனது  பெற்றோர் மற்றும்  உறவினர்கள் பள்ளி நுழைவாயிலில் திரண்டதால் பதற்றமான  சூழ்நிலை ஏற்பட்டது. சைதாப்பேட்டை உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசீல்  தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக   குவிக்கப்பட்டனர். மேலும், பள்ளிக்கு நேற்று விடுமுறையும் அறிவித்துள்ளனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.



Tags : Kotivakam , Frustrated by being beaten by a teacher in front of fellow students, a school student hanged himself; There is excitement in Kotivakam
× RELATED சக மாணவர்கள் முன் ஆசிரியர் அடித்ததால்...