சென்னையில் இருந்து தோகா புறப்பட்ட கத்தார் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு; 139 பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 3.20 மணிக்கு, கத்தார் தலைநகர் தோகாவுக்கு, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் செல்வது வழக்கம். இந்தவிமானம் தினமும் அதிகாலை 1.30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் புறப்படும்.

அதேபோன்று  நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை வந்த விமானத்தில், 139 பயணிகள் தோகா செல்ல இருந்தனர். 139 பயணிகள், விமான ஊழியர்கள் 7 பேர் என மொத்தம் 146 பேருடன் புறப்பட்டது. ஓடுபாதையில் ஓட தொடங்கியபோது இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கண்டுபிடித்தார். உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு அவசரமாக நிறுத்தினார்.

இதையடுத்து, இழுவை வண்டி மூலம் விமானத்தை இழுத்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு பொறியாளர்கள் குழுவினர் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று காலை 11 மணி வரை பழுது பார்க்கப்படவில்லை. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் 139 பேரும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் மீண்டும் இன்று அதிகாலை புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: