இசிஆர் 6 வழிச்சாலை பணிகள் 2024ல் முடியும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) சென்னை மாநகரை மாமல்லபுரம், புதுச்சேரி, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரியை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலை 2000ல் மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் திருவான்மியூர் முதல் அக்கரை வரை நான்கு வழித்தடமாக மேம்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இச்சாலை அக்கரை முதல் மாமல்லபுரம் வரை நான்கு வழித்தடமாக மேம்படுத்தப்பட்டது. திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கி.மீ. ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்த நில எடுப்பு பணிக்காக தமிழக அரசால் 2005ம் ஆண்டு நவ.11ம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது. தற்போது, ரூ.930 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட உள்ளது.

திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய ஆறு கிராமங்களில் நில எடுப்பு பணி நடந்து வருகிறது. இதில் பாலவாக்கம் கிராமத்தில் இடைக்கால இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு நில ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கிராமங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இப்பணிகள் சாலையின் மையத்தில் 12 மீட்டர் அகலத்திற்கு மைய தடுப்பு சுவர், தடுப்பு சுவரின் இருபுறமும் 11 மீட்டர் அகலத்திற்கு மூன்று வழித்தடம், 1.65 மீட்டர் அகலத்திற்கு பேவர் பிளாக் தளம் மற்றும் 2 மீட்டர் அகலத்திற்கு மழைநீர் வடிக்காலுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, பாலவாக்கம் கிராமத்தில் ஆறுவழித்தடமாக அகலப்படுத்தும் பணி 2019ம் ஆண்டு ரூ.15.85 கோடிக்கு நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.

இரண்டாம் கட்டமாக கொட்டிவாக்கம் கிராமத்தில் 6 வழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கு 2021ம் ஆண்டு ரூ.17.16 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இப்பணிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் 2023ம் ஆண்டு இப்பணிகள் முழுமையாக முடிவடையும். மேலும், மூன்றாம் கட்டமாக நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்நல்லூர் கிராமங்களில் 6 வழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கு கடந்த ஜூலை மாதம் ரூ.126.947 கோடிக்கு ஒப்புதல் வழங்கி, ரூ.134.575 கோடிக்கு தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த பணிகள் 2024ம் ஆண்டுக்குள் முடிவடையும். இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: